ஸ்ரீகாளஹஸ்தி சொர்ணமுகி ஆற்றில் புஷ்கர உற்சவம்: திரிசூல தீர்த்தவாரி

சொர்ணமுகி ஆற்றில் நடைபெறும் திரிசூல தீர்த்தவாரி நிகழ்ச்சியானது, மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
திரிசூல தீர்த்தவாரி
திரிசூல தீர்த்தவாரி
Published on

திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நடக்கும் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவுக்கு முன் மிகப்பெரிய விழாவாக சொர்ணமுகி ஆற்றில் புஷ்கர உற்சவம் நடக்கும். அன்று ‘திரிசூல ஸ்நானம்’ எனப்படும் திரிசூல தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கும். இது, மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் தொடக்கத்தைக் குறிக்கிறது. திரிசூல ஸ்நானம் சொர்ணமுகி ஆற்றில் நடப்பது வழக்கம்.

அதன்படி நேற்று ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் அருகில் உள்ள சொர்ணமுகி ஆற்றில் புஷ்கர உற்சவம் நடந்தது. அதையொட்டி திரிசூல ஸ்நானம் எனப்படும் திரிசூல தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.

சிவபெருமான் நந்தி வாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சி.
சிவபெருமான் நந்தி வாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சி.

முன்னதாக கோவிலில் நேற்று காலை மூலவர்களான ஞானப்பிரசுனாம்பிகை தாயார், ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. கோவிலி வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளான சாமி-அம்பாள், விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி, பக்த கண்ணப்பர், சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தீர்த்தவாரி

தொடர்ந்து மேள தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்க கோவிலில் இருந்து ஊர்வலமாக சொர்ணமுகி ஆற்றுக்கு உற்சவர்கள் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு, கோவில் வேதப் பண்டிதர்கள் வேதமந்திரங்களை ஓத, அர்ச்சகர்கள் திரிசூலத்துக்கு சிறப்புப்பூஜைகள் செய்தனர்.

அதன்பிறகு திரிசூலத்தை அர்ச்சகர்கள் சொர்ணமுகி ஆற்றுக்கு எடுத்துச் சென்று மூன்று முறை மூழ்கி எடுத்து ஸ்நானம் செய்வித்து தீர்த்தவாரி நிகழ்ச்சியை நடத்தினர். அப்போது சொர்ணமுகி ஆற்றில் திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனிதநீராடி வழிபட்டனர். பின்னர் அங்கிருந்து உற்சவர்கள் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Also Read
திருவண்ணாமலை ஈசான்ய குளத்தில் தீர்த்தவாரி
திரிசூல தீர்த்தவாரி

வீதி உலா

தொடர்ந்து உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு நந்தி வாகனத்தில் உற்சவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், சிம்ம வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும், மூஷிக வாகனத்தில் விநாயகரும், சப்பரத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசாமியும், தனித்தனி பல்லக்குகளில் பக்த கண்ணப்பரும், சண்டிகேஸ்வரரும் எழுந்தருளி சன்னதி தெரு வழியாக நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்நிகழ்ச்சியில் கோவில் அதிகாரிகள், பக்தர்கள் பங்கேற்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com