திருவெண்காடு: பால்குடம் எடுத்து அகோரமூர்த்தி சுவாமியை வழிபட்ட பக்தர்கள்


திருவெண்காடு: பால்குடம் எடுத்து அகோரமூர்த்தி சுவாமியை வழிபட்ட பக்தர்கள்
x

நள்ளிரவு ஒரு மணி வரை அகோரமூர்த்தி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு கிராமத்தில் தேவார பாடல் பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் நவகிரகங்களில் புதன் ஸ்தலமாக விளங்கி வருகிறது. இங்கு சிவபெருமானின் அம்சமான அகோரமூர்த்தி தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

அகோர மூர்த்தி சுவாமிக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். இதில் கார்த்திகை மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வாய்ந்தது. இத்திருநாளில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அகோர மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்துவது வழக்கம்.

அதன்படி நேற்று அகோர மூர்த்தி சுவாமிக்கு கார்த்திகை மாத மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் காவடிகள், பால்குடங்கள் எடுத்து கோவிலை சுற்றியுள்ள நான்கு வீதிகளின் வழியாக வலம் வந்து கோவிலை வந்தடைந்தனர். பின்னர் நள்ளிரவு ஒரு மணி வரை பால், தயிர், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், கரும்புச்சாறு, இளநீர் உட்பட 51 வகையான திரவியங்களால் அகோர மூர்த்தி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.

சிறப்பு வழிபாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் கலந்துகொண்டார். அவர் சூரிய தீர்த்தத்தில் இருந்து பால்குடம் எடுத்து கோவிலை வலம் வந்து அகோரமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம் செய்வித்தார். பின்னர் சுவாமி, அம்பாள் மற்றும் புதன் பகவான் சன்னதிகளுக்கு சென்று வழிபட்டார்.

இவ்விழாவில் மாவட்ட அறங்காவலர் நியமன குழு தலைவர் சாமிநாதன், திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவில் அறங்காவலர் குழு தலைவர் எம்.என். ஆர்.ரவி மற்றும் உறுப்பினர்கள், திமுக பிரமுகர்கள் மேலையூர் முத்து தேவேந்திரன், நெடுஞ்செழியன், இளைஞர் அணி நிர்வாகிகள் தினகர், மங்கை வெங்கடேஷ் மற்றும் கோவில் செயல் அலுவலர், பணியாளர்கள் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

1 More update

Next Story