

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின்கீழ் இயங்கிவரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், உளவியல் பகுப்பாய்வு சோதனைகளுடன் கூடிய வழிகாட்டுதல், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்குதல், போட்டித் தேர்வுகளுக்கான நேரடி பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரித் தேர்வுகள், கல்வி தொலைக்காட்சி வாயிலாக போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
போட்டிதேர்வுகளுக்கு, திறமையான, அனுபவமிக்க பயிற்றுனர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் பாடக்குறிப்புகள், தினசரி, மாத இதழ்கள், முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் ஆகியவை வழங்கப்படுவதுடன் பாடவாரியான துணைத்தேர்வுகள், மாதிரித்தேர்வுகள் ஆகியவையும் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், ரெயில்வேயில் குரூப்-டி போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்பானது இன்று(புதன்கிழமை) முதல் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையிலான அனைத்து வேலைநாட்களிலும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விருப்பமுள்ள போட்டித்தேர்வர்கள் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம், ஏ-28, முதல் தளம், டான்சி கட்டிடம், திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-32 என்ற அலுவலக முகவரியிலும், 044-22500134, 9361566648 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.
மேற்கண்ட தகவல் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.