

சென்னை,
உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர் நிலை-2, தனிப்பிரிவு உதவியாளர், உதவிப்பிரிவு அலுவலர், வனவர் ஆகிய குரூப்-2 பதவிகளுக்கும், முதுநிலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், மேற்பார்வையாளர், உதவியாளர் நிலை-3, உதவியாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், செயல் அலுவலர் நிலை-3, கீழ்நிலை செயலிட எழுத்தர் ஆகிய குரூப்-2ஏ பதவிகளுக்கும் மொத்தம் 828 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஆண்டு (2025) ஜூலை மாதம் 15-ந்தேதி வெளியானது.
இதற்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 4 லட்சத்து 20 ஆயிரத்து 217 பேர் எழுதினார்கள். அவர்களுக்கான தேர்வு முடிவு கடந்த டிசம்பர் மாதம் வெளியானது. அதில் குரூப்-2 பதவிகளில் 1,126 பேரும், குரூப்-2ஏ பதவிகளில் 9,457 பேரும் தகுதி பெற்றவர்களாக டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்தது.
அதனைத் தொடர்ந்து முதன்மைத் தேர்வு வருகிற 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலையில் குரூப்-2ஏ பதவிகளுக்கான பாடத்தேர்வும், பிற்பகலில் குரூப்-2, 2ஏ பதவிகளுக்கான தமிழ்த் தகுதித்தாள் தேர்வும் நடைபெறுகிறது. இதனையடுத்து 22-ந்தேதி குரூப்-2 பதவிகளுக்கான பாடத்தேர்வு நடைபெற உள்ளது.