மாணவர்களுக்கான இலவச பஸ் திட்டம் தொடங்கியது

புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் வாரத்திற்கு 2 முட்டை வழங்கும் திட்டம் மற்றும் இலவச பஸ் திட்டத்தை கவர்னர், முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தனர்.
Published on

புதுச்சேரி

புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் வாரத்திற்கு 2 முட்டை வழங்கும் திட்டம் மற்றும் இலவச பஸ் திட்டத்தை கவர்னர், முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தனர்.

இலவச பஸ் திட்டம்

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா காலத்தில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. இதனால் அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் இயக்கப்பட்டு வந்த ரூ.1-க்கான மாணவர்கள் சிறப்பு பஸ்கள் நிறுத்தப்பட்டது. கொரோனா முடிவடைந்து தற்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் ரூ.1-க்கான மாணவர் சிறப்பு பஸ்களுக்கு பதிலாக மாணவர்களுக்கு இலவச பஸ் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்திருந்தார்.

இந்த திட்டத்தின் தொடக்க விழா நேற்று மதியம் ரோடியர் மில் திடலில் நடந்தது. நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு, இணை இயக்குனர் சிவகாமி, துணை இயக்குனர் பூபதி மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பாதுகாப்பு அம்சங்கள்

தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுச்சேரியில் தற்போது மாணவர்கள் இலவச பஸ்கள் நாளை (இன்று) முதல் தொடங்கப்பட்டுள்ளது. புதுவை, காரைக்காலில் 76 வழித்தடங்களில் இந்த பஸ்கள் இயக்கப்படும். நாளை (இன்று) முதல் 54 வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்படுகிறது. மீதமுள்ள வழித்தடங்களில் அடுத்த வாரம் முதல் பஸ்கள் இயக்கப்படும். இந்த பஸ்களில் ஜி.பி.எஸ்., கண்காணிப்பு கேமரா, வேக கட்டுப்பாட்டு கருவி, கதவு உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன.

மேலும் தற்போது மாணவர்களுக்கு மதிய உணவுடன் சேர்ந்து வாரத்திற்கு 2 முட்டை வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதனை 3 முட்டையாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு இலவச சைக்கிள், மடிகணினி விரைவில் வழங்கப்பட உள்ளது. காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். அரசு அறிவித்த திட்டங்கள் ஒவ்வொன்றாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மதிய உணவில் மீண்டும் முட்டை

கொரோனாவுக்கு முன்பு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுடன் 2 முட்டைகள் வழங்கப்பட்டது. கொரோனாவுக்கு பிறகு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை அக்சயா என்கிற தன்னார்வ நிறுவனம் ஏற்றுக்கொண்டது. இந்த நிறுவனத்தின் மூலம் சைவ உணவு மட்டும் தான் வழங்கப்பட்டு வருகிறது. எனவே மாணவர்களுக்கு முட்டை வழங்க வேண்டும் என்று பெற்றோர், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனை தொடர்ந்து அரசு கல்வித்துறை நேரடியாக முட்டைகளை கொள்முதல் செய்து மத்திய சமையல் கூடத்தில் அவற்றை வேக வைத்து பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கிறது. புதுவையில் மொத்தம் 293 பள்ளிகள் உள்ளன. இதில் 147 பள்ளிகளுக்கு 25 ஆயிரம் முட்டைகள் இன்று அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பணியை பள்ளி கல்வித்துறை துணை இயக்குனர் கொஞ்சிமொழி குமரன் நேரில் பார்வையிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைத்தார். இதே போல் 2 பிரிவுகளாக பிரித்து வாரத்தில் 4 நாட்கள் 1 லட்சம் முட்டைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com