சிங்கம்புணரி பகுதிகளில் கைவரிசை காட்டிய 3 பேர் கைது; 55 பவுன் நகை மீட்பு

சிங்கம்புணரி பகுதிகளில் கைவரிசை காட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 55 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
Published on

சிவகங்கை,

சிங்கம்புணரியை அடுத்த உலகம்பட்டி, புழுதிப்பட்டி, கண்டவராயன்பட்டி பகுதிகளில் கடந்த சில மாதங்களில் பகல் நேரத்தில் பூட்டியிருக்கும் வீட்டை உடைத்து தொடர்ச்சியாக சிலர் திருடி வந்த னர். போலீசாருக்கு சவால் விடுவதை போல் நடைபெற்ற இந்த கைவரிசை சம்பவங்களில் ஈடுபட்டவர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன் உத்தரவின் பேரில் திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாத்துரை மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்பாபு, பிரபு, ராஜா, ஆனந்தி ஆகியோர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவசாமி, சரவணன், ராமச்சந்திரன் ஆகியோர்களை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் நடத்திய விசாரணையில் மானாமதுரையை அடுத்த களத்துரை சேர்ந்த அழகர்சாமி (வயது 30), வேலூர் கிராமத்தை சேர்ந்த அழகுபாண்டி (29), கருப்பசாமி (55) உள்பட 4 பேர் கொண்ட கும்பல் இந்த தொடர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. அதைதொடர்ந்து தனிப்படை போலீசார் 4 பேரையும் தேடி வந்தனர்.

இந்தநிலையில் தனிப்படையினர் தலைமறைவாக இருந்த அழகர்சாமி, அழகுபாண்டி, கருப்பசாமி ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் உலகம்பட்டி, புழுதிப்பட்டி, கண்டவராயன்பட்டி பகுதிகளில் 5 வீடுகளில் சுமார் 90 பவுன் நகைகளை திருடியது தெரியவந்தது.

மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் 55 பவுன் நகைகளையும், திருட்டு சம்பவங்களின் போது பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் கைப்பற்றினர். மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரையும் தேடி வருகின்றனர். போலீசாருக்கு சவால் விடும் வகையில் கைவரிசை காட்டிய 3 பேரை கைது செய்த தனிப்படையினரை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டி பரிசு வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com