கடலூர்,
கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்தவர் அன்சர்மீரான் (வயது 29). இவர், சிரியாவில் செயல்படும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக கடந்த பிப்ரவரி மாதம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து சென்னை பூந்தமல்லி தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையில் கடந்த ஜூலை மாதம் புழல் சிறையில் கைதிகளுக்கு இடையே நடந்த மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். எனவே பாதுகாப்பு கருதி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முக்கிய கைதிகள் மட்டும் கடலூர், கோவை, திருச்சி, பாளையங்கோட்டை ஆகிய சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். அந்த வகையில் புழல் சிறையில் இருந்த அன்சர்மீரான், கடந்த 21.7.2018 அன்று கடலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் வருகிற 3-ந் தேதிக்குள்(நாளை) கடலூர் மத்திய சிறையை தகர்த்து, அன்சர் மீரானை கடத்த பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டு இருப்பதாக மத்திய உளவுத்துறைக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர்களது உத்தரவை தொடர்ந்து மாநில உளவுத்துறை போலீசார் கடலூர் மத்திய சிறைக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து கடலூர் மத்திய சிறையில் திருச்சி சிறைத்துறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம் மேற்பார்வையில் நேற்று முன்தினம் மாலை முதல் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கைதிகள் தங்கியுள்ள அறைகள், சிறைவளாகம் உள்பட அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. மேலும் அந்த பகுதி முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் போலீசார் கொண்டு வந்துள்ளனர்.
அதுமட்டுமின்றி கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையிலான போலீசாரும் மத்திய சிறைக்கு செல்லக்கூடிய கேப்பர்மலை சாலை, வண்டிப்பாளையம் சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
கடலூர் மத்திய சிறையில் நேற்று காலையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதாவது சிறைச்சாலை நுழைவு வாயிலின் முன்பகுதியில் ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 6 போலீசாரும், மத்திய சிறைச்சாலையின் உள்பகுதியில் ஒரு இன்ஸ்பெக்டர், 3 சப்-இன்ஸ்பெக்டர், 10 போலீசாரும், 20 துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் சிறையை சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார், ரோந்து சென்றபடி கண்காணித்து வருகிறார்கள்.
மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாதாரண கைதிகளை திங்கட்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் உறவினர்கள் பார்க்கலாம். அதன்படி நேற்று திங்கட்கிழமை என்பதால் கைதிகளை பார்க்க காலையிலேயே உறவினர்கள் வந்திருந்தனர். அவர்களை போலீசார் தீவிர சோதனை செய்தனர். மேலும் அடையாள அட்டை வைத்திருந்தவர்களை மட்டுமே உள்ளே சென்று, கைதிகளை பார்க்க போலீசார் அனுமதித்தனர். இதனால் கடலூர் மத்திய சிறை அமைந்துள்ள கேப்பர் மலை பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.