நெல்லை,
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா வடமலைப்பட்டி மேலத்தெருவை சேர்ந்த பொதிகாசலம் மகன் முருகன். ஆட்டோ டிரைவர். இவருடைய தந்தை பொதிகாசலம் சொக்கநாதன்பட்டியில் சத்துணவு அமைப்பாளராக வேலை செய்து வந்தார். முருகனின் தந்தை பொதிகாசலம் பணியில் இருந்தபோது இறந்து விட்டார்.
அவர் கருணை அடிப்படையில் வேலை கேட்டு முதல்-அமைச்சர், கலெக்டர் ஆகியோருக்கு மனு அனுப்பினார். இந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து முருகனுக்கு ஒரு கடிதம் வந்தது.
அதில் தந்தை இறப்பு சான்று, கல்வி சான்று, ரேஷன் கார்டு, வருமானச்சான்று, தடையின்மை சான்று, வாரிசு சான்று, இருப்பிட சான்று, தனது குடும்பத்தில் அரசு பணியில் யாரும் இல்லை என்ற சான்று ஆகியவற்றுடன் பஞ்சாயத்து யூனியன் ஆணையாளரிடம் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் முருகனின் தாயார் இறந்து விட்டார். அவருடைய இறப்பை முருகன் பதிவு செய்யவில்லை. இறப்பு சான்றிதழ் கேட்டு முருகன் அம்பை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அம்பை கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து முருகன் சம்பந்தப்பட்ட வடமலைப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் விக்டர் தர்மராஜை நேரில் சந்தித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு கூறினார். அதற்கு அவர் ரூ.300 லஞ்சம் தர வேண்டும் என்றார். ஆனால் லஞ்சம் கொடுக்க மனம் இல்லாததால் முருகன் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தார். அவர்கள் ரசாயனம் தடவிய ரூ.300-ஜ கொடுத்து அனுப்பினர். 21-2-2008 அன்று அலுவலகத்தில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் விக்டர் தர்மராஜிடம் ரூ.300-ஐ முருகன் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து நின்ற லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் தலைமையில் போலீசார் விக்டர் தர்மராஜை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.
ஜெயில் தண்டனை
இந்த வழக்கு நெல்லை லஞ்ச ஒழிப்பு சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. நெல்லை லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு எஸ்கால், இன்ஸ்பெக்டர் அனிதா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் ஆகியோர் சாட்சிகள் மற்றும் ஆவணங்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
நீதிபதி பத்மா இந்த வழக்கை விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார். அதில், கிராம நிர்வாக அலுவலர் விக்டர் தர்மராஜூக்கு ஓர் ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சீனிவாசன் ஆஜராகி வாதாடினார்.