தண்டவாளத்தை கடக்க முயன்றபோது விபத்து: மொபட் மீது வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதால் பரபரப்பு - தனியார் நிறுவன ஊழியர் உயிர் தப்பினார்

சென்னை கூடுவாஞ்சேரி அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது மொபட் மீது வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியது. இதில் தனியார் நிறுவன ஊழியர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
Published on

தாம்பரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முத்து. இவரது மகன் நானி (வயது 22). இவர் ஆன்-லைன் மூலம் உணவு விற்பனை செய்யும் நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை செய்து வருகிறார்.

நேற்று உணவை ஆர்டர் செய்த நுகர்வோருக்கு, விரைந்து கொடுக்க வேண்டும் என்பதற்காக உணவை எடுத்து கொண்டு தன்னுடைய மொபட்டில் சென்றார்.

கூடுவாஞ்சேரியில் இருந்து வண்டலூர் செல்லும் சாலை அருகில் உள்ள ரெயில்வே கேட்டில் உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது சென்னை எழும்பூரில் இருந்து மதுரை நோக்கி சென்ற வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. இதனை கவனிக்காமல் அவசர அவசரமாக மொபட்டில் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

அப்போது மொபட் திடீரென தண்டவாளத்தில் நின்று விட்டது. அதற்குள் ரெயில் வேகமாக வந்ததை கண்ட நானி மொபட்டை தண்டவாளத்திலேயே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தார். இதனை கண்ட என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தினார். ஆனாலும் ரெயில் வந்த வேகத்தில் மொபட் மீது மோதியது. இதில் பயங்கர சத்தத்துடன் மொபட் சுக்குநூறாக உடைந்து சிதறியது. சில பாகங்கள் பல மீட்டர் தூரத்தில் சென்று விழுந்தது. இருப்பினும் நானி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

மேலும் சில உடைந்த பாகங்கள் ரெயிலில் சிக்கி இருந்தது. ரெயில் என்ஜின் டிரைவர் அந்த பாகங்களை அகற்றினார். பின்னர் இது குறித்து ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தாம்பரம் ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசார் நானியை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

பின்னர் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் 20 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com