திருமண ஆசைகாட்டி மோசம் செய்ததாக புகார் நடிகையிடம் உல்லாசமாக இருந்த நடிகர் கைது கற்பழிப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்

சென்னையில் திருமண ஆசைகாட்டி நடிகையிடம் உல்லாசமாக இருந்த நடிகர் கற்பழிப்பு சட்டப்பிரிவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Published on

சென்னை,

தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 32)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் நடிகர் சசிகுமார் நடித்த படம் ஒன்றில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர் சென்னை மாம்பலம் அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்த தியாகராஜன்(32) என்பவரை நான் உயிருக்கு உயிராக காதலித்தேன். நானும் சினிமாவில் நடித்தேன். அவரும் தரிசுநிலம் என்ற படத்தில் நடித்தார். சென்னை மாநகராட்சியில் அவர் வேலை செய்கிறார். சினிமா வாயிலாக எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. 2011-ம் ஆண்டு முதல் எங்களுக்குள் காதல் உள்ளது. அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி கொடுத்தார். அவருக்கு நான், எனக்கு அவர் என்ற பாசத்தில் நெருங்கி பழகி வந்தேன். அதனால் உல்லாசத்தை பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு எங்களது உறவு இருந்தது.

திருமணம் செய்ய மறுப்பு

தியாகராஜனின் போக்கில் திடீரென்று மாற்றம் ஏற்பட்டது. என்னை சந்திப்பதை தவிர்த்தார். செல்போனில் மணிக்கணக்கில் பேசியவர் என்னிடம் பேசுவதையும் நிறுத்தினார். என்னை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று ஒரு குண்டை தூக்கி போட்டு விட்டார். அவரை மறக்காவிட்டால், என்னை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி வருகிறார். என்னுடன் நெருக்கமாக பழகி நம்பிக்கை மோசடி செய்த தியாகராஜன் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வழக்கு-கைது

இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமி உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் ஜோஸ்பின் லூர்து மேரி விசாரணை நடத்தினார். கற்பழிப்பு, நம்பிக்கை மோசடி மற்றும் கொலை மிரட்டல் உள்பட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் தியாகராஜன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தியாகராஜன் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் போலீஸ் விசாரணையின் போது அவர் தன் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்ததாக தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com