விஜயாப்புரா,
கொரோனா வைரஸ் கர்ப்பிணிகளை அதிகளவில் தாக்கி வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் கர்ப்பமாக இருந்தார். நிறைமாத கர்ப்பிணியான அந்த பெண்ணுக்கு கொரோனா அறிகுறி தென்பட்டது.
உடனே அவர் விஜாப்புரா மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருடைய சளி, ரத்தம் மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அந்த கர்ப்பிணிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து அந்த கர்ப்பிணிக்கு டாக்டர்கள் கண்ணும் கருத்துமாக தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இரட்டை குழந்தைகள் பிறந்தன
இந்த நிலையில் நேற்று அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே மருத்துவமனையின் மகப்பேறு தலைமை டாக்டர் மன்பிரீத் கவுர் தலைமையிலான மருத்துவ குழுவினர் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர். அந்த கர்ப்பிணி சுகப்பிரசவமாக இரட்டை பெண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
இதில் ஒரு குழந்தை 2 கிலோவும், மற்றொரு குழந்தை 2 கிலோ 100 கிராம் எடையுடன் உள்ளது. தாய்க்கு கொரோனா பாதிப்பு இருந்ததால், பிறந்த 2 குழந்தைகளின் ரத்தம், சளி மாதிரி கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த பரிசோதனை அறிக்கைக்காக டாக்டர்கள் காத்திருக்கிறார்கள்.
நலமாக உள்ளனர்
இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், கொரோனா பாதித்த கர்ப்பிணி இரட்டை பெண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். அவரது குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றனர். தாயும், சேய்களும் நலமாக இருப்பதாகவும், தாயையும், குழந்தைகளையும் தனித்தனி வார்டுகளில் வைத்து பராமரித்து வருவதாகவும் தெரிவித்தனர்.