சென்னை அண்ணாசாலையில் பட்டப்பகலில் நாட்டு வெடிகுண்டு வீச்சு; மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற மர்மநபர்களுக்கு வலைவீச்சு

சென்னை அண்ணாசாலையில் பட்டப்பகலில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
சென்னை அண்ணாசாலையில் பட்டப்பகலில் நாட்டு வெடிகுண்டு வீச்சு; மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற மர்மநபர்களுக்கு வலைவீச்சு
Published on

சென்னை,

சென்னை அண்ணாசாலையில் நேற்று வழக்கம்போல் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் அண்ணாசாலை மற்றும் மேயர் சுந்தரராவ் சாலை சந்திப்பில் நேற்று மாலை 4 மணி அளவில் திடீரென பலத்த வெடிசத்தம் கேட்டது. தொடர்ந்து அங்கு கரும்புகை கிளம்பியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அந்த பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இதையடுத்து வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள கட்டிடங்களும் அதிர்ந்ததால், அதில் இருந்த பொதுமக்கள் பதறியடித்தபடி வெளியே வந்தனர். இதனால் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம் அருகே சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பலத்த வெடிசத்தம் குறித்து வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தேனாம்பேட்டை போலீசார், அந்த பகுதியில் ஏற்பட்ட போக்கு வரத்து நெரிசலை உடனே சரி செய்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண் காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது அங்குள்ள கடை ஒன்றில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகிய காட்சிகள் போலீசாரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

அந்த கண்காணிப்பு கேமராவில், அண்ணா மேம்பாலத்தில் இருந்து தேனாம்பேட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற 2 மர்மநபர்கள் சாலையின் தடுப்பு சுவருக்கு மறுபுறம் சென்ற கார் மீது வெடிகுண்டு வீசும் காட்சி பதிவாகி இருந்தது.

ஆனால் அந்த வெடிகுண்டு கார் மீது படாமல் சாலையில் விழுந்து வெடித்தது. இதனால் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் அங்குள்ள கடையின் கண்ணாடிகள் சேதம் அடைந்தன.

வெடிகுண்டு வெடித்த இடத்தின் அருகில் அமெரிக்க தூதரகம் உள்ளதால் அந்த பகுதியில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பாதுகாப்பு மிகுந்த இடத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதால், பெருநகர சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா, துணை கமிஷனர் அசோக்குமார், உதவி கமிஷனர் கோவிந்தராஜ் உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகளும் விசாரணை நடத்தினர்.

இதனைத்தொடர்ந்து துணை சூப்பிரண்டு தலைமையிலான கியூ பிரிவு போலீசார் மற்றும் மாநில உளவுத்துறையினரும் வெடிகுண்டு வீசிய மர்மநபர்கள் யார்?, அவர்கள் குறிவைத்த காரில் சென்றது யார்? என தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இதற்கிடையே வெடிகுண்டு வெடித்த இடத்தை உதவி இயக்குனர் சோபியா தலைமையிலான தடயவியல் நிபுணர்கள் குழுவும் ஆய்வு செய்து மாதிரிகளை சேகரித்தனர்.

இந்த விசாரணை குறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ஜெமினி மேம்பாலத்தில் இருந்து மேயர் சுந்தரராவ் சாலைக்கு செல்ல, போக்குவரத்தின் எதிர்திசையில் கருப்பு நிற கார் ஒன்று சென்றது. அந்த காரை குறிவைத்து தான் தடுப்புச்சுவருக்கு மறுபகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்கள் வெடிகுண்டுகளை வீசியுள்ளனர். வெடிகுண்டு வீசப்படுவதை அறிந்த கார் டிரைவர் அதிவேகமாக காரை, மேயர் சுந்தரராவ் சாலையில் ஓட்டி சென்றதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் மர்மநபர்கள் வீசியது நாட்டு வெடிகுண்டு ஆகும். இந்த வகை நாட்டு வெடிகுண்டு பலத்த சத்தம் மற்றும் அதிக அளவில் புகையை வெளிப்படுத்தும் வகையை சேர்ந்தது என தடயவியல் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் முன்விரோதம் காரணமாக நடந்ததா? அல்லது வேறு எதுவும் காரணம் உள்ளதா? என்று விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை அண்ணாசாலையில் பட்டப்பகலில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெடிகுண்டு வீசப்பட்டதை நேரில் பார்த்த சொகுசு கார் ஷோரூம் உரிமையாளர் காபர் கான் கூறியதாவது:-

நான் எனது காரை நிறுத்திவிட்டு, கார் ஷோரூமின் உள்ளே இருந்தேன். அப்போது வழக்கமான வெடிசத்தத்தை விட வித்தியாசமான சத்தம் கேட்டது. மேலும் கட்டிடம் முழுவதும் அதிர்ந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நான் உடனே வெளியே வந்து பார்த்தேன். அப்போது அங்கு கரும்புகையாக காணப்பட்டது. மேலும் கருப்பு நிற கார் ஒன்று வேகமாக சென்றது. மேலும் ஷோரூம் வெளியே நிறுத்தப்பட்டிருந்த எனது காரின் பின்புற கண்ணாடியும் முழுவதுமாக சேதம் அடைந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com