திருவண்ணாமலையில், ஆக்கிரமித்து கட்டப்பட்ட 2 வீடுகள் அகற்றம் - அதிகாரிகளுடன் வாக்குவாதம்

திருவண்ணாமலை அரசு இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 2 வீடுகள் அகற்றப்பட்டது. அப்போது அதிகாரிகளுடன் அங்கிருந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலையில், ஆக்கிரமித்து கட்டப்பட்ட 2 வீடுகள் அகற்றம் - அதிகாரிகளுடன் வாக்குவாதம்
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி சமீபத்தில் நடந்து முடிந்த சித்ரா பவுர்ணமிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கிரிவலப்பாதையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஈசான்ய லிங்கம் அருகே அரசு புறம்போக்கு இடத்தில் சிலர் வீடு கட்டிக்கொண்டும், செங்கல் சூளை வைத்தும் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டது அவருக்கு தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க நகராட்சி அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து நேற்று காலை நகரமைப்பு அலுவலர் பழனிவேல் தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்தவர்கள் அதிகாரிகளிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் தகவலறிந்த திருவண்ணாமலை துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை மற்றும் போலீசார் சம்பவஇடத்துக்கு சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 2 வீடுகள் இடித்து அகற்றப்பட்டது. அவர்களில் ஒரு குடும்பத்தினர் நடத்தி வந்த செங்கல் சூளையும் இடித்து அகற்றப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் திருவண்ணாமலை- போளூர் சாலையின் ஓரம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த பெட்டிக்கடையுடன் கூடிய இளநீர் கடையையும் அதிகாரிகள் அகற்றினர்.

ஆக்கிரமிப்பு செய்தவர்கள் கூறுகையில், நாங்கள் பல ஆண்டுகளாக இந்த பகுதியில் வசித்து வருகிறோம். இந்த முகவரியில் தான் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை போன்றவை பெற்றுள்ளோம். நகராட்சிக்கும் வரிகளை செலுத்தி வருகிறோம். தற்போது வீடு இழந்து உள்ளோம். மாற்று இடத்தில் வசிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதே போல் செங்கம் சாலையில் சாலையோரம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 2 பெட்டிக்கடைகளையும் அதிகாரிகள் அகற்றினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com