குடியுரிமை திருத்த சட்டத்தால் அத்வானியை பாகிஸ்தானுக்கு அனுப்புவார்களா? மத்திய அரசுக்கு, வேல்முருகன் கேள்வி

குடியுரிமை திருத்த சட்டத்தால் அத்வானியை பாகிஸ்தானுக்கு அனுப்புவார்களா? என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பினார்.
Published on

திண்டுக்கல்,

திண்டுக்கல்லில், தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆனால், பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா, மாணவர்கள் கற்களை வீசினால் குண்டுகளை வீசுவோம் என்கிறார். இதன்மூலம் மத கலவரத்தை தூண்டி, அரசியல் ஆதாயம் தேடுவதற்கு பா.ஜனதா முயற்சி செய்கிறது. எனவே, கலவரத்தை தூண்டும் வகையில் பேசும் எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டில் அனைத்து மதத்தினரும் ஒரு தாய் பிள்ளைகளாக, ஒற்றுமையாக வாழ்கிறார்கள். அதை கெடுத்து மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசும் நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் மத்திய அரசு பணிகளில், இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் பணி அமர்த்தப்படுகின்றனர். மேலும் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளை இந்தியாவை சேர்ந்த யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களுக்கு, தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதை வன்மையாக கண்டிக்கிறோம். அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. அதேபோல் தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு வேலையில் முன்னுரிமை அளிக்க வேண்டும். மத்திய பா.ஜனதா அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது.

மத்திய அரசு கூறுவது போன்று 21 ஆவணங்களை மக்கள் எவ்வாறு கொடுக்க முடியும். எந்தவித ஆவணமும் இல்லாமல் பலதலைமுறைகளாக வசிக்கும் மலைவாழ் மக்கள் எந்த ஆவணத்தை வழங்க முடியும். குடியுரிமை திருத்த சட்டத்தின்படி அத்வானியை பாகிஸ்தானுக்கு அனுப்பி விடுவார்களா? அல்லது முஷரப்பை இந்தியாவுக்கு கொண்டு வந்து விடுவார்களா? இந்த குடியுரிமை திருத்தம் நாட்டு மக்களை அச்சுறுத்தும் சட்டம். மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com