பெருவாக்கோட்டை கிராமத்தில் வீணாகும் காவிரி குடிநீர்

பெருவாக்கோட்டை கிராமத்தில் வீணாகும் காவிரி குடிநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Published on

தொண்டி,

திருவாடானை தாலுகா மங்கலக்குடி அருகே உள்ள பெருவாக்கோட்டை கிராமத்தில் தேவகோட்டைவட்டாணம் சாலையின் ஓரத்தில் காவிரி குடிநீர் செல்லும் பெரிய அளவிலான குழாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதில் இருந்து வெளியேறும் தண்ணீர் அப்பகுதியில் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் குளிப்பது, துணி துவைப்பது, பாத்திரங்கள் கழுவுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த தண்ணீர் கழிவுநீராகி காட்சி அளிக்கிறது.

மேலும் இந்த தண்ணீர் மீண்டும் குடிநீர் குழாய்களுக்குள் செல்வதால் இதனை குடிக்கும் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள பாகனூர், ஆண்டாவூருணி, கட்டவிளாகம், என்.எம்.மங்கலம், கட்டிவயல், வெள்ளையபுரம், பனஞ்சாயல், ஓரியூர், வட்டாணம், புல்லக்கடம்பன் ஆகிய ஊராட்சிகள் உள்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் கண்டுகொள்ளவில்லை. மேலும் இதுநாள் வரை குழாய் உடைப்பு சீரமைக்கப்படவில்லை. தற்போது இப்பகுதியில் கடும் வறட்சி காரணமாக குடிநீர் தேவை அதிகம் உள்ள நிலையில் இதுபோன்று தண்ணீர் வீணாகி கொண்டிருப்பதை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பகுதியில் உள்ள கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு அதிகஅளவில் ஏற்பட காரணம் அதிகாரிகளின் கவனக்குறைவே என பொதுமக்கள் மத்தியில் பெரும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இப்பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com