

குன்னூர்
குன்னூர் அருகே 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
10-ம் வகுப்பு மாணவி
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள அருவங்காடு பாலாஜி நகரை சேர்ந்தவர் விசுவநாதன். இவருடைய மனைவி மகாலட்சுமி. இவர்களது மகள் ரசீதா(வயது 15). அருவங்காட்டில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், பள்ளிகளில் ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ரசீதா வழக்கம்போல் ஆன்லைன் வகுப்பில் கவனம் செலுத்தி கொண்டு இருந்தார்.
குளிக்க சென்றார்
அதன்பிறகு குளித்துவிட்டு வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு குளியல் அறைக்கு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் குளித்துவிட்டு அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர், குளியல் அறைக்கு சென்று அவரது பெயரை சொல்லி அழைத்தனர். ஆனால் அவர் பதில் கூறவில்லை. உடனே கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
தற்கொலை
அப்போது ரசீதா, தூக்கில் தொங்கி கொண்டு இருப்பது தெரியவந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக அவரை மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி ரசீதா பரிதாபமாக உயிரிழந்தார். அவர் ஏன் தற்கொலை முடிவை எடுத்தார்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து அருவங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.