கர்நாடகாவில் கொத்தடிமைகளாக இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் உள்பட 11 பேர் மீட்பு

கர்நாடகாவில் கொத்தடிமைகளாக இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் உள்பட 11 பேர் மீட்கப்பட்டனர். அவர்களை கிருஷ்ணகிரிக்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் கொத்தடிமைகளாக இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் உள்பட 11 பேர் மீட்பு
Published on

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பெட்டமுகிலாளம் கிராமத்தை சேர்ந்தவர் மாதப்பன் (வயது 40). இவர் கர்நாடக மாநிலம் கூடலூ என்ற இடத்தில் உள்ள செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வந்தார். இவருடன் பணியாற்றிய செம்மலம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. செம்மலம், மாதப்பனிடம் கனகபுராவில் பண்ணையில் அதிக சம்பளத்தில் வேலை இருப்பதாக கூறி உள்ளார். இதை நம்பிய மாதப்பன், தனது மனைவி கெஞ்சம்மா (33) மற்றும் அவர்களின் 7 குழந்தைகள் ஆகியோர் கனகபுராவில் உள்ள பண்ணை நிலத்திற்கு வேலைக்கு சென்றனர்.

பண்ணை நிலத்தின் உரிமையாளர் கூச்சப்பா தன்னிடம் வேலைக்கு வந்த மாதப்பன் குடும்பத்திற்கு ஒரு ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் சம்பளம் தருவதாக ஒப்புக்கொண்டார். இதனால் மாதப்பன், மனைவி மற்றும் குழந்தைகளுடன் கடந்த 4 ஆண்டுகளாக பண்ணையில் வேலை செய்து வந்துள்ளனர். ஆனால் அவர்கள் சம்பளம் இல்லாமல் கொத்தடிமைகளாக பணியாற்றி வந்துள்ளனர். மாதப்பன் குடும்பத்தினர் கொத்தடிமையாக இருந்த 4 ஆண்டுகளில் அந்த தம்பதிக்கு மேலும் 2 குழந்தைகள் பிறந்தது.

பிரசவ காலத்தில் தனது மனைவியை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பண்ணை உரிமையாளர் கூச்சப்பா அனுமதி கொடுக்க மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் மாதப்பனே தனது மனைவிக்கு பிரசவம் பார்த்துள்ளார். மேலும், தனது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பண்ணை உரிமையாளர் மறுத்ததோடு மாதப்பனின் 9 குழந்தைகளையும் கால்நடை மேய்க்க பயன்படுத்தி உள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் என்ற தன்னார்வ அமைப்பு மற்றும் ஹரோஹள்ளி போலீசார் அங்கு சென்றுள்ளனர்.

அப்போது மாதப்பன் மற்றும் அவருடைய மனைவி, குழந்தைகள் அடிப்படை வசதிகள் இல்லாத குடிசையில் தங்க வைத்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் உள்பட 11 பேரை அவர்கள் மீட்டனர். போலீசார் வருவதை அறிந்த பண்ணை உரிமையாளர் கூச்சப்பா தலை மறைவாகி விட்டார். இவர் மீது வழக்குப்பதிவு செய்த ஹரோஹள்ளி போலீசார் தலைமறைவாக உள்ள கூச்சப்பாவை தேடி வருகின்றனர். கர்நாடகாவில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட மாதப்பன் உள்ளிட்ட 11 பேரையும் கிருஷ்ணகிரிக்கு அழைத்து வர தன்னார்வ அமைப்பினர் நடவடிக்கை மேற் கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com