

கரூர்,
கரூர் மாவட்ட செயலாளர் நன்மாறன் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் நேற்று கரூர் லைட் அவுஸ் கார்னர் பகுதியில் உள்ள அமராவதி ஆற்றில் புதிய மற்றும் பழைய ஆற்றுப்பாலங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாரும் பணியை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த சீமைக்கருவேல மரங்கள், குப்பைகள் உள்ளிட்டவற்றை அகற்றி சுத்தப்படுத்தினர். இதற்கிடையே இதுகுறித்து தகவல் அறிந்ததும் அமராவதி ஆறு வடிநில கோட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து உரிய அனுமதி பெற்று தூர்வார வலியுறுத்தினர். எனினும் நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து அனுமதியின்றி அந்த பணியை மேற்கொண்டனர்.
இதற்கிடையே இது குறித்து அமராவதி ஆறு உதவி செயற்பொறியாளர் ராஜகேபால், கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அமராவதி ஆற்றில் தூர்வாரும் பணியை மேற்கொண்டிருந்த நாம் தமிழர் கட்சியினர் 12 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முன்னதாக தூர்வாரும் பணி குறித்து நாம் தமிழர் கட்சியின் கரூர் மாவட்ட செயலாளர் நன்மாறன் நிருபர்களிடம் கூறுகையில், அமராவதி ஆற்றில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் ஆங்காங்கே தேங்கியிருந்த குப்பைகள் உள்ளிட்ட கழிவுகள் நீரில் அடித்து செல்லப்பட்டன. எனினும் கரூர் லைட் அவுஸ் பகுதி உள்ளிட்ட இடங்களில் அமராவதி ஆற்றுக்குள் அடர்ந்து காணப்படும் சீமைக்கருவேல மரங்களில் குப்பைகள் படர்ந்து சுகாதார சீர்கேட்டை விளைவிக்கும் வகையில் உள்ளன. எனவே பொதுநலன் கருதி இதனை முழுமையாக அப்புறப்படுத்தி தூர்வார மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டும் உரிய பதில் இல்லை. இதனால் தான் தாமாகவே முன்வந்து தூர்வாரும் பணியை மேற்கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக அமராவதி ஆறு வடிநில கோட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், கரூர் லைட்அவுஸ் அமராவதி ஆற்று பாலமானது 90 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது ஆகும். மேலும் தற்போது தான் ஆற்றில் வெள்ள அபாயம் நீங்கி நீர்வரத்து குறைந்திருக்கிறது. இந்த சூழலில் பொக்லைனை ஆற்றுக்குள் இறக்கினால் மண்ணில் புதையக்கூடும். எனவே தான் உரிய அனுமதி பெறாமல் தூர்வாரியதற்காக நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர் என தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியினர் 12 பேரையும், கரூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எண்-2 நீதிபதி சுப்பையாவின் வீட்டிற்கு கரூர் டவுன் போலீசார் நேரில் அழைத்து சென்று ஆஜர்படுத்தினர். அப்போது இதனை விசாரித்த நீதிபதி, சமூக நலன் கருதி தூர்வாரும் பணியில் ஈடுபட்டதால் அந்த 12 பேரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பாமல் நிராகரித்து உத்தரவிட்டார். இதையடுத்து அந்த 12 பேரும் சிறைக்கு அழைத்து செல்லப்படாமல் வீடு திரும்பினர்.