

நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் நேற்று நாகர்கோவில் வந்தார். அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் காவல்துறையின் அணுகுமுறை தவறானது. துப்பாக்கி சூடு சம்பவத்தில் இறந்த 13 பேரின் சாவுக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும். இந்த விஷயத்தில் பிரதமர் பேசாமல் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு சாமானிய மக்களை பெரிதும் பாதித்துள்ளது. உயர்ந்துவரும் பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கவேண்டும். மாநில அரசு அதன் மீதான கலால்வரியை குறைக்கவேண்டும். இல்லையேல், அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் உயர்ந்து விடும்.