144 தடை உத்தரவை மீறிய 7 பேரின் வாகனம், ஓட்டுனர் உரிமம் நிரந்தரமாக ரத்து - கலெக்டர் அதிரடி நடவடிக்கை

144 தடை உத்தரவை மீறி வெளியே வாகனங்களை ஓட்டியதால் 7 பேரின் வாகனம், ஓட்டுனர் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டது.
144 தடை உத்தரவை மீறிய 7 பேரின் வாகனம், ஓட்டுனர் உரிமம் நிரந்தரமாக ரத்து - கலெக்டர் அதிரடி நடவடிக்கை
Published on

வேலூர்,

கொரோனா வைரசை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்த்தால் வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க முடியும் என்பதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிர்த்தனர். எனினும் ஒருசிலர் வெளியே தங்களது இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்த வண்ணம் உள்ளனர். ஆட்டோக்களையும் இயக்கி வருகின்றனர்.

இதை தடுக்கும் வகையில் தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்யவும், கைது செய்யவும் கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து காவல்துறை, வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் மூலம் எண்ணற்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

எனினும் பலருக்கு வைரஸ் தொற்று குறித்த பயமில்லாமல் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரத்துக்கு புகார்கள் சென்றது. இதையடுத்து வாகனங்களின் உரிமம் மற்றும் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்து வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார்.

பின்னர் வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் தலைமையில் அதிகாரிகள் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தேவையில்லாமல் வெளியே வந்த 3 பேரின் இருசக்கர வாகனங்கள், 4 ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர். மேலும் கலெக்டரின் அதிரடி உத்தரவின் பேரில் 7 பேரின் வாகன உரிமம் மற்றும் ஓட்டுனர் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வருகிற 17ந் தேதிக்கு பின்னர் பொது ஏலம் விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சோதனை தொடரும் எனவும், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு, உரிமங்கள் ரத்து செய்யப்படும் எனவும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com