பெங்களூருவில் விரைவில் 150 மின்சார பஸ்களின் சேவை தொடங்கப்படும்

பெங்களூருவில் விரைவில் 150 மின்சார பஸ்களின் சேவை தொடங்கப்படும் என்று மந்திரி எச்.எம்.ரேவண்ணா கூறினார்.
பெங்களூருவில் விரைவில் 150 மின்சார பஸ்களின் சேவை தொடங்கப்படும்
Published on

பெங்களூரு,

கர்நாடக அரசின் போக்குவரத்து துறை சார்பில் ஒவ்வொரு மாதமும் 2-வது வாரம் ஞாயிற்றுக்கிழமை நாளில் குறைவான வாகன போக்குவரத்து தினம் அனுசரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன் தொடக்க விழா பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் போக்குவரத்து துறை மந்திரி எச்.எம்.ரேவண்ணா கலந்து கொண்டு அந்த தினத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-

டெல்லியில் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் ஓடுகின்றன. இதனால் காற்று மாசு அடைந்துவிட்டது. இதன் காரணமாக பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன. நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான பெங்களூருவில், அதிகளவில் வாகனங்கள் ஓடுகின்றன. முன்எச்சரிக்கை நடவடிக்கையாக காற்று மாசடைவதை குறைக்கும் வகையில் மாதத்தில் 2-வது ஞாயிற்றுக்கிழமை நாளில் குறைவான வாகன போக்குவரத்து தினம் அனுசரிக்க முடிவு செய்யப்பட்டு, அந்த தினத்தை பின்பற்றுவது தொடங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களின் சொந்த வாகனங்களை விட்டுவிட்டு அரசு பஸ்கள் உள்பட பொது போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்த முன்வர வேண்டும். காற்று மாசு அடைவதை தடுக்க கர்நாடக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நகரில் தற்போது 80 லட்சம் வாகனங்கள் ஓடுகின்றன. இதில் 52 லட்சம் வாகனங்கள் தனியார் வாகனங்கள் ஆகும்.

வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் காற்று மாசுவும் அதிகரிக்கிறது. இதை தடுக்கும் பொருட்டு பஸ்களில் பயணிப்பவர்களின் நலனுக்காக கட்டணத்தில் தள்ளுபடி சலுகையும் வழங்கப்படுகிறது. தேவைப்பட்டால் பொதுமக்களுடன் கலந்து ஆலோசனை நடத்தப்பட்டு கருத்துகள் கேட்டு அறியப்படும்.

இந்த நாளில் பஸ்கள் மற்றும் மெட்ரோ ரெயில்கள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படும். மின்சார வாகனங்கள் மற்றும் சைக்கிள்களை அதிகம் பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறைந்த தூரமுள்ள பகுதிகளுக்கு மக்கள் நடந்தே செல்லலாம். பெங்களூருவில் விரைவில் 150 மின்சார பஸ்களின் சேவையை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் 40 பஸ்கள் விரைவில் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்படும். காற்று மாசுபாட்டை குறைக்கவும், வாகன நெரிசலை குறைக்கவும் தேவையான திட்டங்களை பட்ஜெட்டில் அறிவிக்குமாறு முதல்-மந்திரியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

இவ்வாறு எச்.எம்.ரேவண்ணா பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com