வெளிநாட்டில் பரிதவித்த தமிழக தொழிலாளர்கள் 19 பேர் குமரி திரும்பினர்

வெளிநாட்டில் பரிதவித்த தமிழக தொழிலாளர்கள் 19 பேர் நேற்று குமரி திரும்பினர். தங்களை ஏமாற்றிய காண்டிராக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருவட்டார் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
வெளிநாட்டில் பரிதவித்த தமிழக தொழிலாளர்கள் 19 பேர் குமரி திரும்பினர்
Published on

திருவட்டார்,

குமரி மாவட்டம் தக்கலை அருகே திருவிதாங்கோட்டை சேர்ந்த 40 வயதுடைய காண்டிராக்டர் ஒருவர் கடந்த 15 ஆண்டுகளாக பக்ரைன் நாட்டில் வேலை செய்து வருகிறார். ஆரம்பத்தில் வெளிநாட்டுக்கு கொத்தனராக வேலைக்கு சென்றவர், அங்குள்ள முதலாளிகளிடம் நன்மதிப்பை பெற்று காண்டிராக்டராக உயர்ந்தார்.

பின்னர் கடந்த சில ஆண்டுகளாக ஊருக்கு வரும்போதெல்லாம் தன்னுடன் வேலைக்கு ஆட்களை அழைத்து செல்வது வழக்கம். அதன்படி அவரிடம் தமிழ்நாட்டை சேர்ந்த 20 பேர் உள்பட 33 பேர் வேலை செய்து வந்தனர். இதில் 5 தொழிலாளர்கள் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

இதற்கிடையே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பக்ரைன் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் காண்டிராக்டரிடம் ஒரு கட்டிட பணியை ஒப்படைத்தார். அத்துடன் இந்த பணிக்காக ரூ.40 கோடியை கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட ஒரு வாரத்தில் காண்டிராக்டர் தலைமறைவானதாக தெரிகிறது. அவர் வெளியூர்களுக்கு ஏதாவது பொருட்கள் வாங்க சென்றிருக்கலாம் என அனைவரும் நினைத்திருந்தனர். ஆனால், நாட்கள் பல கடந்தும் காண்டிராக்டர் திரும்ப வரவில்லை.

இதனால், அவரிடம் வேலை பார்த்து வந்த 33 தொழிலாளர்களும் உணவுக்காக அவதிபட்டனர். அவர்கள் மீது பரிதாபம் கொண்ட தொழிலதிபர் உணவு உள்பட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தார்.

இந்த 33 பேரில் காண்டிராக்டரின் உறவினர் ஒருவரும் உண்டு. அவரை காண்டிராக்டர் ரகசியமாக தொடர்பு கொண்டு இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார். மீதமுள்ளவர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் பரிதவித்தனர்.

இந்தநிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த 20 பேரில் ஒருவர் வீடு திரும்பிய நிலையில், மீதமுள்ள 19 பேரும் சொந்த ஊர் திரும்ப தொழிலதிபர் உதவி செய்தார். அவர்களுக்கு விமான டிக்கெட் உள்பட அனைத்து உதவிகளும் செய்து இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார்.

அதன்படி 19 பேரும் நேற்று திருவனந்தபுரம் வந்து சேர்ந்தனர். இவர்களில் கண்ணனூர் பகுதியை சேர்ந்த மைக்கேல் ராஜ் (வயது 44) என்பவரும் இடம் பெற்றிருந்தார். தொடர்ந்து மைக்கேல் ராஜ் தலைமையில் சொந்த ஊர் திரும்பிய 19 பேரும் திருவட்டார் போலீஸ் நிலையத்துக்கு வந்து ஒரு புகார் மனு கொடுத்தனர்.

அந்த புகாரில் தங்களை வெளிநாட்டுக்கு அழைத்து சென்று ஏமாற்றிய காண்டிராக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். அந்தஅடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com