கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு பா.ம.க, வன்னியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கக்கோரி அனைத்து ஒன்றிய அலுவலகங்கள் முன் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு பா.ம.க, வன்னியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Published on

திருவண்ணாமலை,

கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி நேற்று தமிழகம் முழுவதும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு பா.ம.க.மற்றும் வன்னியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள அரசு ஐ.டி.ஐ. அருகிலிருந்து ஒன்றியக்குழு உறுப்பினர் பக்தவச்சலம் தலைமையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தினர் மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு சென்று அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பா.ம.க. மாநில துணை பொதுச் செயலாளர் இரா.காளிதாஸ், மாநில துணைத் தலைவர் எம்.ராதாகிருஷ்ணயாதவ், மாநில மகளிரணி துணைச் செயலாளர் சே.புஷ்பா, மாவட்ட துணை செயலாளர் அருண்குமார் உள்பட்ட நிர்வாகிகள் ஒன்றிய ஆணையாளர் இரா.ஆனந்தனை சந்தித்து மனு அளித்தனர்.

ஆரணி தொகுதி பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தினர் இணைந்து மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கேட்டு கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணை பொதுச்செயலாளர் ஆ.வேலாயுதம் தலைமை தாங்கினார்.

அதேபோல் ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாவட்ட விவசாய அணி செயலாளர் அ.கருணாகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் ஆ.குமார், நகர செயலாளர்கள் என்.சதீஸ்குமார், சு.ரவிச்சந்தின், மாவட்ட மகளிரணி செயலாளர் ஞானம்மாள் செல்வராஜ், ஒன்றிய தலைவர் அ.பாபு உள்பட பா.ம.க. நிர்வாகிகள், வன்னியர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் நாடக கலைஞர்கள் சிறப்பு வேடமிட்டு பங்கேற்றனர். அதைத்தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

கீழ்பென்னாத்தூர் ஒன்றிய பா.ம.க சார்பில் வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கோரி மாவட்ட பா.ம.க. பொருளாளர் வீரம்மாள் தலைமையில், திரவுபதி அம்மன் கோவில் அருகில் இருந்து பா.ம.க மற்றும் வன்னியர் சங்கத்தினர் கலந்து கொண்ட ஊர்வலம் முக்கிய சாலைகள் வழியாக சென்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அடைந்தது. அங்கு கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து 15 பேர் குழுவாக சென்று ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் க.பா.மகாதேவனிடம் கோரிக்கை மனு வழங்கி சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

நிகழ்ச்சியில், மாவட்ட பா.ம.க துணைத் தலைவர் பெருமாள் கவுண்டர், துணை செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தேர்தல் பிரசார குழு தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கோ.எதிரொலி மணியன் தலைமை தாங்கினார்.

மாநில துணை பொதுச் செயலாளர் வேலாயுதம், மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ், மாவட்ட வன்னியர் சங்க தலைவர் பாசறை பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் க.பாலசுப்பிரமணியன், மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் சுப்பு என்ற பாலசுப்பிரமணியன் உள்பட பலர் பேசினர். இதில் 50 பெண்கள் உள்பட 500 பேர் கலந்து கொண்டனர். இதையடுத்து கோரிக்கை மனுவை வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரனிடம் வழங்கினர்.

வந்தவாசி மற்றும் தெள்ளார் ஒன்றிய அலுவலகங்கள் முன்பு வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கேட்டு பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் மனு கொடுத்தனர்.

வந்தவாசியில் மாவட்ட செயலாளர் சீனுவாசன் தலைமையிலும், தெள்ளாரில் மாநில பா.ம.க. துணைத் தலைவரும், முன்னாள் எம்.பி.யான துரை தலைமையிலும் போராட்டம் நடந்தது.

போராட்டத்தில் மாநில வன்னியர் சங்க துணைத் தலைவர் பிச்சைக்கண்ணு, தலைவர் வெங்கடேசன், ஒன்றிய செயலாளர்கள், வீரபாண்டியன், ஹரிகுமார் மற்றும் 160 பெண்கள் உள்பட 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

செங்கத்தில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே போராட்டம் நடந்தது.. இந்த போராட்டத்தில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டது. அதேபோல செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகிலும் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தை சேர்ந்தவர்கள் 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் மாவட்ட செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் சேட்டு, ஒன்றிய செயலாளர்கள் கணபதி, பிரகாஷ், ரங்கநாதன், பாலாஜி மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர் முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தராஜலுவிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com