

நாமக்கல்,
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் நேற்று நாமக்கல்லில் மத்திய அரசின் 3 ஆண்டுகால சாதனைகள் குறித்த விளக்க கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி அனைவரும் வங்கிக்கணக்கு தொடங்கவேண்டும் என தெரிவித்தபோது, அனைவரிடமும் எழுந்த கேள்வி பணம் இல்லாமல் எப்படி வங்கிக்கணக்கு தொடங்குவது, ஏழைகளை வங்கிகளில் கணக்கு தொடங்க அறிமுகம் செய்துவைப்பது யார்? என்பதுதான். அப்போதுதான் பிரதமர் பணம் இல்லாமல் வங்கிக்கணக்கு தொடங்கவும், வங்கிகளில் கணக்கு தொடங்க நானே அனைவரையும் அறிமுகம் செய்துவைக்கிறேன் எனவும் கூறினார்.
29 கோடி வங்கி கணக்குகள்
கடந்த 2014-ம் ஆண்டு வரை இந்தியாவில் 4 கோடி வங்கிக்கணக்குகள் மட்டுமே இருந்தன. பிரதமரின் இந்த ஜன்தன் திட்டம் காரணமாக கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் புதிதாக 29 கோடி வங்கிக்கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் ரூ.65ஆயிரம் கோடி பாமரமக்களின் சேமிப்பு பணமாக உள்ளது.
உலகத்திலேயே அதிக விபத்து நடக்கும் நாடாக இந்தியா உள்ளது. இங்கு ஒரு ஆண்டில் மட்டும் 5 லட்சம் விபத்துகள் நடக்கின்றன. இதில் 1 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். பல லட்சம் பேர் உறுப்புகளை இழந்து விடுகின்றனர். இவர்களில் 16 வயது முதல் 34 வயது வரை உள்ளவர்களே அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவேதான் பிரதமர் விபத்து காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்தார். இதன்படி ஆண்டுக்கு ரூ.12 பிரீமிய கட்டணமாக செலுத்தினால் போதும், ரூ.2 லட்சம் இழப்பீடு கிடைக்கும். இதேபோல ஆயுள் காப்பீடு திட்டத்தில் ரூ.330 செலுத்தினால் ரூ.2 லட்சம் இழப்பீடு கிடைக்கும்.
கியாஸ் மானியம்
இந்தியாவில் இதுவரை விபத்து காப்பீடு திட்டத்தில் 10 கோடி பேர் சேர்ந்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 65 லட்சத்து 87 ஆயிரம் பேர் இணைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் 1 லட்சத்து 75 ஆயிரம் பேர் இத்திட்டத்தில் இணைந்துள்ளனர். அனைவருக்கும் இலவச கியாஸ் வசதி கிடைக்கவேண்டும் என்ற நோக்கில் பிரதமர் வசதி படைத்தவர்கள் தங்களின் கியாஸ் மானியத்தை விட்டுக்கொடுக்க முன்வரவேண்டும் என கேட்டுக்கொண்டார். அவரின் வேண்டுகோளை ஏற்று இதுவரை இந்தியாவில் 24 கோடி பேர் சமையல் கியாஸ் மானியத்தை விட்டுக்கொடுத்து உள்ளனர். தமிழகத்தில் 23 லட்சம் பேர் சமையல் கியாஸ் மானியத்தை விட்டுக்கொடுத்து உள்ளனர்.
முத்ரா வங்கி திட்டத்தின் மூலம் இதுவரை 7 கோடி பேர் கடன் பெற்றுள்ளனர். ரூ.4 லட்சம் கோடி வங்கிக்கடன் வழங்கப்பட்டுள்ளது. நாடு சுதந்திரமடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் 2014-ம் ஆண்டு வரை 18,500 கிராமங்கள் மின்சாரவசதி இல்லாமல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பிரதமர் ஆயிரம் நாட்களில் அத்தனை கிராமங்களுக்கும் மின்சாரவசதி செய்துகொடுக்க உத்தரவிட்டார். கடந்த 2 ஆண்டுகளில் அவற்றில் 14 ஆயிரம் கிராமங்களுக்கு மின்சாரவசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நாட்களில் எஞ்சிய கிராமங்களுக்கும் மின்சாரவசதி செய்து கொடுக்கப்படும்.
விவசாயிகள் தற்கொலை
தமிழகத்தில் 400 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக கூறுகிறார்கள். மத்தியஅரசின் திட்டங்களை முறையாக செயல்படுத்தி இருந்தால் விவசாயிகளின் தற்கொலையை தடுத்து இருக்கலாம். மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ரூ.45 ஆயிரத்து 35 கோடி நிதிஒதுக்கீடு செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் விவசாயிகளுக்கு இதுவரை ரூ.57 ஆயிரத்து 503 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதுதவிர ரூ.10 லட்சம் கோடி விவசாயிகளுக்கு ஓராண்டுக்குள் கடன் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு ஆகும்.
நாமக்கல் மாவட்டத்தில் 4 லட்சத்து 21 ஆயிரம் வீடுகளில் கியாஸ் இணைப்பு உள்ளது. 78 ஆயிரம் வீடுகளில் கியாஸ் இணைப்பு இல்லை என தெரியவந்துள்ளது. இதில் 9 ஆயிரம் ஏழை குடும்பங்களுக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்கும் பணியை தற்போதுநான் தொடங்கி வைத்துள்ளேன்.
இந்தியாவில் மொத்தம் 53 லட்சம் கி.மீட்டர் நீளத்துக்கு சாலை உள்ளது. இதில் 90 ஆயிரம் கி.மீட்டர் தேசிய நெடுஞ்சாலை. இதில்தான் 40 சதவீத சரக்கு போக்குவரத்து நடைபெறுகிறது. இதனை 2 லட்சம் கி.மீட்டராக உயர்த்தவும், நாள்ஒன்றுக்கு தற்போது 23 கி.மீட்டர் தொலைவுக்கு சாலை அமைத்து வருகிறோம். இதனை 2019-ம் ஆண்டுக்குள் 40 கி.மீட்டர் தொலைவு என்ற நிலைக்கு கொண்டுவரவும் இலக்கு நிர்ணயித்துள்ளோம். 1,500 பழைய பாலங்களை ரூ.40 ஆயிரம் கோடி செலவில் சீரமைக்க உள்ளோம். நாமக்கல் மாவட்டத்தில் ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் ரூ.26 கோடியில் மேம்பாலம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மரக்கன்றுகள்
கூட்டத்தில் பி.ஆர்.சுந்தரம் எம்.பி., பா.ஜனதா நிர்வாகி முருகேசன் ஆகியோர் பேசினர். தொடர்ந்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சமையல் கியாஸ் மானியத்தை விட்டு கொடுத்தவர்களை கவுரவித்து மரக்கன்றுகள் வழங்கினார். ஏழை பெண்களுக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்கும் பணியையும் தொடங்கிவைத்தார். இதில் பா.ஜனதா நிர்வாகிகள், நகரின் முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிதிபிரிவு இயக்குனர் கிருஷ்ணபிரசாத் வரவேற்றார். முடிவில் நாமக்கல் மாவட்ட பா.ஜனதா தலைவர் சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.
முன்னதாக நாமக்கல் ஆண்டவர் நகரில் நடந்த மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி, பா.ஜனதா இளைஞரணி நிர்வாகிகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சிகளில் பொன்.ராதா கிருஷ்ணன் கலந்து கொண்டார்.