

குமாரபாளையம்,
தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டை குமாரபாளையத்தில் நடத்த நம்ம குமாரபாளையம் அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு அரசின் விதிமுறைகள் இடம் கொடுக்கவில்லை என மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க மறுப்பு தெரிவித்தது. இதைத்தொடர்ந்து நம்ம குமாரபாளையம் அமைப்பினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
கோர்ட்டில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைத்தது. இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் குமாரபாளையம் வளையக்காரனூர் அருகே உள்ள சஷ்டி நகரில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நேற்று ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. காலை 8 மணிக்கு இதற்கான ஆயத்த பணிகள் தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் வந்திருந்தனர். மருத்துவ பரிசோதனைக்குப்பின் இவர்கள் மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
உறுதிமொழி ஏற்பு
காலை 10.45 மணி அளவில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, கலெக்டர் ஆசியா மரியம், திருச்செங்கோடு உதவி கலெக்டர் கீர்த்தி பிரியதர்ஷினி, தாசில்தார் ரகுநாதன், செல்வகுமார சின்னையன் எம்.பி, பொன்.சரஸ்வதி எம்.எல்.ஏ ஆகியோர் அங்கு வந்தனர். அவர்களை ஜல்லிக்கட்டு அமைப்பாளர் ஓம்சரவணா சால்வை அணிவித்து வரவேற்றார்.
பின்னர் அமைச்சர் தங்கமணி உறுதிமொழி வாசிக்க அதனை மாடுபிடி வீரர்கள் பின் தொடர்ந்து வாசித்து ஏற்றுக் கொண்டனர். முதலில் கோவில் மாடு வாடிவாசலில் இருந்து திறந்து விடப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு காளைகளாக கயிறு அறுத்து விடப்பட்டன. சீறி பாய்ந்த காளைகளை மாடு பிடிவீரர்கள் மடக்கி பிடித்த காட்சி மெய்சிலிர்க்க வைப்பதாக இருந்தது. இந்த ஜல்லிக்கட்டுக்கு மொத்தம் 262 காளைகள் கொண்டு வரப்பட்டு இருந்தன. இதில் ராசிபுரத்தை சேர்ந்த ஒரு காளை மட்டும் உயரம் குறைவாக இருப்பதாக கூறி அனுமதிக்கப்படவில்லை. மீதமுள்ள 261 காளைகளும் ஒன்றன் பின் ஒன்றாக மைதானத்துக்குள் சீறிப்பாய்ந்தன.
பரிசுப்பொருட்கள்
காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், அடக்க முடியாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் ரொக்கப்பரிசும், தங்கம், வெள்ளி காசுகள், கட்டில், மெத்தை, பீரோ, சேர், சைக்கிள், மிக்சி, கிரைண்டர், மின்விசிறி போன்ற பரிசுப்பொருட்களும் வழங்கப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டில் ஒருவர் மட்டும் லேசான காயம் அடைந்தார்.
இதையொட்டி பாதுகாப்பு பணிக்காக அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். மேலும் தீயணைப்புத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளும் அங்கு முகாமிட்டு இருந்தனர். ஜல்லிக்கட்டு குமாரபாளையம் பகுதியில் முதல் முறையாக நடத்தப்பட்டதால், பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து கண்டு களித்தனர். முன்னதாக ஜல்லிக்கட்டுக்கு வந்த பத்திரிகையாளர்கள் அமர்வதற்காக அமைக்கப்பட்ட சிறிய மேடை சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.