பிச்சைக்காரரிடம் பணம் திருடிய 4 சிறுவர்கள் கைது

பெரம்பலூரில் பிச்சைக்காரரிடம் பணம் திருடிய 4 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.
பிச்சைக்காரரிடம் பணம் திருடிய 4 சிறுவர்கள் கைது
Published on

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம் சித்தளியை சேர்ந்த பார்வை குறைபாடுடைய பொன்னுசாமி (வயது 45) பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று இவர், எளம்பலூர் ரோடு சாய்பாபா கோவில் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 18 வயதுக்கு கீழ் உள்ள 4 சிறுவர்கள் திடீரென, பொன்னுசாமி பையில் வைத்திருந்த ரூ.60-ஐ திருடி கொண்டு சென்றனர். இது குறித்து அவர் பெரம்பலூர் போலீசில் புகார் கொடுத்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், பிச்சைக்காரரிடம் பணம் திருடியது பெரம்பலூர் பழைய பஸ்நிலையம், ஆலம்பாடிரோடு சமத்துவபுரம், சங்குபேட்டை பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. அதில் ஒரு சிறுவன் 9-ம் வகுப்பு பெரம்பலூரில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருவதும், மற்றவர்கள் படிப்பை நிறுத்திவிட்டதாகவும், குடும்ப வறுமை காரணமாக பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அந்த சிறுவர்களை கைது செய்து பெரம்பலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மலைக்கோட்டை கூர் நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே... அது நல்லவர் ஆவதும், தீயவர் ஆவதும் அன்னை வளர்க்கையிலே... என்பதை போல் குழந்தை வளர்ப்பில் பெற்றோர் அக்கறை செலுத்த வேண்டும். குழந்தைகளின் நடவடிக்கையை கண்காணித்து தவறு செய்தால் கண்டித்து திருத்த வேண்டும். குடும்ப வறுமை உள்ளிட்டவற்றை காரணம் காட்டி அவர்களை கண்டுகொள்ளாமல் விடுவதாலேயே திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் அறியாமையால் ஈடுபடுகின்றனர். இதனாலேயே சமூகத்தை தாங்கி நிற்கும் தூண்களாகிய அவர்கள், வாழ்க்கையில் தடுமாறி விடுகின்றனர்.

அந்த வகையில் பெரம்பலூரில் 4 சிறுவர்கள், பிச்சைக் காரரிடம் திருடிய சம்பவம் பெரும் தலைகுனிவை ஏற் படுத்தினாலும், அந்த சிறுவர்களின் பயணத்துக்கு காரணம் என்ன? என்பதை அலசி ஆராய்ந்து பார்த்து உரிய ஆலோசனை வழங்கி வழிகாட்ட வேண்டும் என போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். பெரம்பலூரில் கடந்த சில மாதங்களாக திருட்டு உள்ளிட்ட குற்றசம்பவங்களில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் கைதாவது தொடர் கதையாகி வருகிறது. இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com