பெரியநாயகி மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு காளைகள் முட்டியதில் 41 பேர் காயம்

பெரியநாயகி மாதா ஆலய நவநாள் திருவிழாவை முன்னிட்டு, ஆவூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 41 பேர் காயமடைந்தனர்.
பெரியநாயகி மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு காளைகள் முட்டியதில் 41 பேர் காயம்
Published on

ஆவூர்,

புதுக்கோட்டை மாவட்டம் ஆவூரில் பெரியநாயகி மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் நவநாள் திருவிழாவை முன்னிட்டு முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது. இதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று, ஆலயம் அருகே வாடிவாசல் அமைக்கப்பட்டது. ஆவூர் கால்நடை உதவி மருத்துவர் கணபதி பிரசாத் தலைமையிலான மருத்துவக்குழுவினர், போட்டியில் கலந்து கொள்ள கொண்டு வரப்பட்டிருந்த காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.

இதையடுத்து காலை 8.30 மணிக்கு ஜல்லிக்கட்டை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

41 பேர் காயம்

இதில் 185 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டு, சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். சில காளைகள் மாடுபிடி வீரர்களை தூக்கி வீசின. இதில் மதுரை, லால்குடி, திருச்சி, மணப்பாறை, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த 631 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என மொத்தம் 41 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் படுகாயமடைந்த 4 பேர் மட்டும் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பரிசுகள்

ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் தங்கம், வெள்ளி காசுகள், கட்டில், பீரோ, சைக்கிள், மின்விசிறி உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ், இலுப்பூர் கோட்டாட்சியர் வடிவேல்பிரபு, விராலிமலை தாசில்தார் செல்வ விநாயகம் உள்பட பலர் கண்டு ரசித்தனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை பெரியநாயகி மாதா ஆலய நிர்வாகிகள், விழாக்குழுவினர் மற்றும் ஆவூர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com