

மயிலாடுதுறை,
நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சேகர் தேஷ்முக் உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மயிலாடுதுறை அருகே நண்டலாறு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் 1,344 மதுபாட்டில்கள் கடத்தி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கபிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரக்கு ஆட்டோ டிரைவர் காரைக்கால் விழிதியூரை சேர்ந்த பாலு மகன் பவித்திரனை(வயது 22) கைது செய்தனர்.
இதேபோல் தனிப்படை போலீசார், மயிலாடுதுறை சித்தர்காடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரைக்காலில் இருந்து 2 கார்களில் 960 மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்களில் இருந்த காரைக்கால் கோவில்பத்து பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் கார்த்திகேயன்(28), ஊழியபத்து பகுதியை சேர்ந்த மதிவாணன்(42), காரைக்கால் வெள்ளாலகரம் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார்(34), கோட்டுச்சேரி கீழக்காசாக் குடியை சேர்ந்த மார்ட்டின் மகன் விக்டர்(32) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
மேற்கண்ட வழக்குகள் தொடர்பாக 2 ஆயிரத்து 304 மதுபாட்டில்கள், 2 கார்கள், ஒரு சரக்கு ஆட்டோ ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.