

தஞ்சாவூர்,
உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் தனி சன்னதியில் பெரியநாயகி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் மழை வேண்டியும், உலக நன்மைக்காவும் பெரியநாயகி அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடத்தப்படும்.
இந்த ஆண்டிற்கான பூச்சொரிதல் விழா நேற்று நடந்தது. இதையொட்டி தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் உள்ள நால்வர் மண்டபத்தில் இருந்து பக்தர்கள் பூக்கூடைகளை கையில் ஏந்தியபடி ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். இந்த ஊர்வலம் கோவிலை வலம் வந்து பெரியநாயகி அம்மன் சன்னதியை சென்றடைந்தது.
1500 கிலோ மலர்கள்
பின்னர் பக்தர்களால் வழங்கப்பட்ட முல்லை, ரோஜா, தாழம், மகிழம், தாமரை, அல்லி, செம்பருத்தி, கனகாம்பரம், வெட்டிவேர், அரளி உள்ளிட்ட 51 வகையான மலர்களால் பெரியநாயகி அம்மனுக்கு பூச்சொரிதல் நடைபெற்றது. பக்தர்கள் வழங்கிய மலர்களின் எடை 1,500 கிலோ ஆகும். இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.