

சென்னை,
பண்டிகைகள் என்றாலே சொந்த ஊருக்கு சென்று உற்றார்- உறவினர்கள், நண்பர்களுடன் கொண்டாடுவதையே பலரும் விரும்புகிறார்கள். எனவே விழாக்காலங்களில் பஸ்-ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும். பயணிகள் சிரமம் இன்றி பயணிக்க ஏதுவாக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதும் வழக்கம்.
தற்போது விநாயகர் சதுர்த்தியையொட்டி 3 நாட்கள் (வெள்ளி, சனி, ஞாயிறு) தொடர் விடுமுறை வந்ததால், குடும்பத்தினருடன் பலர் சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். சென்னையில் இருந்து மட்டும் 1 லட்சத்து 32 ஆயிரத்து 495 பேர் வெளியூர் புறப்பட்டு சென்றுள்ளனர்.
அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தகவல்
இதுதொடர்பாக தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் கூறியதாவது:-
தொடர் விடுமுறையையொட்டி பயணிகள் எந்தவித சிரமும் இன்றி நிம்மதியாக சொந்த ஊர்களுக்கு சென்று வரும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின் பேரில் சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து கடந்த 9-ந்தேதி அன்று 1,834 வழக்கமான பஸ் சேவைகளுடன் 576 சிறப்பு பஸ்களும் வெளியூர்களுக்கு இயக்கப்பட்டன.
வழக்கமாக இயக்கப்படும் பஸ்கள் மூலம் 1 லட்சத்து 815 பயணிகளும், சிறப்பு பஸ்கள் மூலம் 31 ஆயிரத்து 680 பயணிகளும் என அன்றைய தினம் 1 லட்சத்து 32 ஆயிரத்து 495 பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
போக்குவரத்து கழகங்கள் சார்பில்...
சென்னை கோயம்பேடு பஸ்நிலையத்தில் இருந்து கடந்த 9-ந்தேதி எஸ்.இ.டி.சி.- 354 பஸ்கள் (தினசரி சேவை), 34 பஸ்கள் (சிறப்பு சேவை), டி.என்.எஸ்.டி.சி. (விழுப்புரம் போக்குவரத்து கழகம்) - 1,234 பஸ்கள் (தினசரி), 223 பஸ்கள் (சிறப்பு), கும்பகோண போக்குவரத்து கழகம்-134 பஸ்கள் (தினசரி), 180 பஸ்கள் (சிறப்பு), மதுரை போக்குவரத்து- 35 பஸ்கள் (சிறப்பு), கோவை போக்குவரத்து கழகம் -4 பஸ்கள் (சிறப்பு) இயக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு பயணிகள் வந்து செல்ல வசதியாக அன்றைய தினம் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 80 சிறப்பு பஸ் சேவையும் இயக்கப்பட்டது.