

பல்லடம்
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 6ந் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் பல்லடம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சோதனை சாவடிகள், முக்கிய இடங்கள் மற்றும் சாலைகளில் வாகன சோதனையில் பறக்கும்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். வாகனங்களில் உரிய ஆவணங்கள் இன்றி பணம் மற்றும் விலைமதிப்புள்ள பொருட்களை எடுத்துச்செல்லும் போது விசாரணை செய்து, பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி காளிநாதம்பாளையம் விநாயகர் கோவில் அருகே நேற்று பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சிறிய சரக்கு வேனை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர் அப்போது அதன் ஓட்டுனரான திருப்பூர் பெரிச்சிபாளையத்தைசேர்ந்த சுப்பிரமணி என்பவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.67,900, இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணத்தை பல்லடம் தாலுகா அலுவலகத்தில், தாசில்தாரும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான தேவராஜிடம் ஒப்படைத்தனர்.