8 வழி பசுமை சாலை திட்டம்: போலீசார் மூலம் மிரட்டி நிலங்களை கையகப்படுத்த கூடாது - விவசாயிகள் வலியுறுத்தல்

8 வழி பசுமை சாலை திட்டத்துக்காக போலீசார் மூலம் மிரட்டி நிலங்களை கையகப்படுத்த கூடாது என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
8 வழி பசுமை சாலை திட்டம்: போலீசார் மூலம் மிரட்டி நிலங்களை கையகப்படுத்த கூடாது - விவசாயிகள் வலியுறுத்தல்
Published on

சேலம்,

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் முன்னிலை வகித்தார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

பயிர் காப்பீட்டு தொகை ஏராளமான விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் உள்ளது. அதிகாரிகள் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உடந்தையாக இருப்பதால் இந்த பணம் எங்களுக்கு கிடைப்பதில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வருமா, வராதா? என்பதை தெரிவிக்க வேண்டும்.

பள்ளி குழந்தைகளுக்கு துர்நாற்றம் வீசக்கூடிய அரிசியை சமைத்து சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. (அப்போது விவசாயி ஒருவர் கலெக்டரிடம் அந்த அரிசியை காண்பித்தார்). மாவட்டத்தில் வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும். 8 வழி பசுமை சாலை திட்டத்துக்காக 95 சதவீத விவசாயிகள் நிலத்தை வழங்கி விட்டதாக முதல்-அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டர் கூறி வருகின்றனர். எந்த அடிப்படையில் இதை கூறி வருகிறீர்கள் என்று தெரியவில்லை.

கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் நிலத்தை இந்த திட்டத்துக்காக ஒப்படைக்க மாட்டோம் என்று கூறினர். மாவட்ட நிர்வாகம் போலீசார் மூலம் எங்களை (விவசாயிகள்) மிரட்டி நிலங்களை கையகப்படுத்தி வருகிறது. இதை நிறுத்த வேண்டும். சட்டத்தை மீறி அரசே செயல்பட்டு வருகிறது. 8 வழி பசுமை சாலையை அமைக்க கூடாது.

கலப்படம் செய்யப்படுவதாக வந்த புகாரின் பேரில் சேகோ ஆலைகளில் சோதனைக்கு செல்லும் அதிகாரிகளை சிறைபிடிப்பது கண்டிக்கத்தக்கது. இதுபோன்று திட்டமிட்டு அதிகாரிகளை சிறைபிடிப்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரிநீரை மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பசுமை சாலை திட்டத்துக்கு நிலம் கொடுக்கும் ஒவ்வொரு விவசாயிக்கும் மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.

கூட்டத்தில் கலெக்டர் ரோகிணி பேசும் போது, பயிர் காப்பீட்டு தொகை வழங்குவது தொடர்பாக பேசி வருகிறோம். அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்படும். மேலும் விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com