8 வழிச்சாலை எதிர்ப்பு: சென்னை கோட்டை முன்பு முற்றுகை போராட்டம்

8 வழிச்சாலை அமைக் கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை கோட்டை முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார்.
8 வழிச்சாலை எதிர்ப்பு: சென்னை கோட்டை முன்பு முற்றுகை போராட்டம்
Published on

பரங்கிப்பேட்டை,

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம் பெரியாண்டிக்குழி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகவீரசிங். பு.முட்லூரைச் சேர்ந்தவர் மன்சூர்அலிகான். தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகர்களான இவர்கள் 2 பேரும் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டதை கண்டித்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த நிலையில் ஜாமீனில் வெளியே வந்த வேல்முருகன், தற்கொலை செய்து கொண்ட கட்சி பிரமுகர்களின் வீட்டிற்கு சென்று அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் 2 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவியை வழங்கினார்.
பின்னர் வேல்முருகன் நிருபர்களிடம் கூறியதாவது.

தூத்துக்குடி கலவரத்தில் 13 தமிழர்கள் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டனர். இதை அறிந்து நான் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க தூத்துக்குடி புறப்பட்டேன். அப்போது என்னை போலீசார் தடுத்து கைது செய்தனர். என் மீது மத்திய, மாநில அரசுகள் பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்தனர். பின்னர் போலீசார் என்னை அலைக்கழித்தனர். இதனை கண்டிக்கும் வகையில் நான் சிறையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டேன். இதனால் எனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என யாரும் இனி வரும் காலங்களில் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடக்கூடாது. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து எடப்பாடி அரசுக்கு எதிராக போராட வேண்டும்.

தமிழகத்தில் 8 வழிச்சாலை அமைக்கும் திட்டம் தேவையற்றது. இந்த 8 வழிச்சாலை அமைத்தால் சுங்க கட்டணம் வசூல் செய்யாமல் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுமா? இதற்கு எடப்பாடி அரசு உத்தரவாதம் தருமா?.

8 வழிச்சாலை அமைத்து அதில் வரும் பல ஆயிரம் கோடி கமிஷனை பெற எடப்பாடி அரசு துடிக்கிறது. எனவே இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அடுத்த மாதம் (ஆகஸ்டு) 1-ந்தேதி தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் சென்னை கோட்டை முன்பு முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

சிதம்பரத்தில் சொந்த நிலம் இல்லாமல் வீடு கட்டி குடியிருந்தவர்களின் வீடுகளை இடித்து தள்ளி உள்ளார்கள். இதனை கண்டித்து விரைவில் பெரிய போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் முடிவண்ணன், ஒன்றிய செயலாளர்கள் கோபு, கே.ஆர்.ஜி.தமிழ்வாணன், மாவட்ட துணை செயலாளர் கணேசன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com