திருச்சி மாநகராட்சி சார்பில் 80 ஏக்கர் பரப்பளவுள்ள கொட்டப்பட்டு குளத்தை தூர்வாரும் பணி தொடங்கியது

திருச்சி மாநகராட்சி சார்பில் 80 ஏக்கர் பரப்பளவுள்ள கொட்டப்பட்டு குளத்தை தூர்வாரி சீரமைக்கும் பணி தொடங்கி உள்ளது. அந்த பகுதியை பொழுதுபோக்கு மையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
திருச்சி மாநகராட்சி சார்பில் 80 ஏக்கர் பரப்பளவுள்ள கொட்டப்பட்டு குளத்தை தூர்வாரும் பணி தொடங்கியது
Published on

திருச்சி,

திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் கொட்டப்பட்டு என்ற இடத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளம் உள்ளது. சுமார் 80 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த குளத்தின் மூலம் கொட்டப்பட்டு பகுதியில் முன்பு பாசனம் நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது பாசனம் இல்லை. இந்த குளத்திற்கு குளவாய்ப்பட்டி என்ற இடத்தில் இருந்து புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் இருந்து மதகு மூலம் தண்ணீர் திறந்து விடப்பட்டதும் வரத்து வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பு காரணமாக நிறுத்தப்பட்டு விட்டது.

கொட்டப்பட்டு குளத்தின் சாலையோர பகுதியில் சிலர் மணல் மற்றும் கட்டிட இடிபாடுகளை கொட்டி நிரப்பி ஆக்கிரமிப்பு செய்து அந்த இடத்தில் லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்களை நிறுத்தி வந்தனர். குளத்தின் உள் பகுதியிலும் சீமை கருவேல மரங்கள் ஏராளமாக முளைத்து காடு போல் காட்சி அளித்தது.

இந்த குளத்தை தூர்வாரி சீரமைக்கும் பணியை திருச்சி மாநகராட்சி நிர்வாகம் கையில் எடுத்து உள்ளது. முதற்கட்டமாக நேற்று காலை 4 பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் சீமை கருவேல மரங்கள் எல்லாம் அப்புறப்படுத்தப்பட்டன. மேலும் மணல் குவித்து ஆக்கிரமிப்பு செய்து மேடு போல் உருவாக்கி இருந்த இடத்தை கரைத்து குளத்தை ஆழப்படுத்தும் பணியும் தொடங்கியது.

தூர்வாரும் பணியை திருச்சி மாவட்ட கலெக்டர் கே. ராஜாமணி, மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது திருச்சி கிழக்கு தாசில்தார் மணிகண்டன், மாநகராட்சி பொன்மலை கோட்ட உதவி ஆணையர் தயாநிதி, உதவி பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் பிரின்ஸ் ஆகியோர் உடன் வந்து இருந்தனர்.

தூர்வாரும் பணி தொடர்பாக கலெக்டர் ராஜாமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

திருச்சி மாநகர பகுதிக்குள் இவ்வளவு பெரிய குளம் அமைந்து இருப்பது மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். தற்போது இந்த குளத்தின் மூலம் பாசனம் இல்லை என்றாலும் குளத்தில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி ஆழப்படுத்தினால் மழை நீரை சேமித்து வைக்க முடியும். இதன் மூலம் நீராதாரம் பாதுகாக்கப்படும். முதல் கட்டமாக முள் செடிகளை அகற்றி குளத்தை ஆழப்படுத்திய பின்னர் இதன் 4 கரைகளும் பலப்படுத்தப்படும். அந்த கரைகளில் பொதுமக்கள் நடை பயிற்சி செல்வதற்கான வசதிகள், உட்காருவதற்கான இருக்கைகள், மின் விளக்குகள் அமைக்கப்படும். எதிர்காலத்தில் இந்த பகுதி ஒரு பொழுதுபோக்கு மையமாக மாற்றப்படும். மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக இந்த பணிகள் எல்லாம் முடிவடையும்.

சுமார் 25 ஏக்கர் பரப்பளவுள்ள திருச்சி சாத்தனூர் குளத்தை தூர்வாரும் பணியானது ஏற்கனவே தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடந்து வருகிறது. இதே போல் திருச்சி மாநகராட்சி எல்லைக்குள் உள்ள அனைத்து ஏரி மற்றும் குளங்களும் அடையாளம் காணப்பட்டு அவற்றை தூர்வாரும் பணி தொடங்க இருக்கிறது. மாநகராட்சியின் இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com