வெள்ளகோவில் ஒன்றியத்தில் 9 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் கலெக்டர் பங்கேற்பு

வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 9 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி கலந்து கொண்டார்.
வெள்ளகோவில் ஒன்றியத்தில் 9 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் கலெக்டர் பங்கேற்பு
Published on

வெள்ளகோவில்,

வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இலக்கமநாயக்கன்பட்டி, மேட்டுப்பாளையம், நாகமநாயக்கன்பட்டி, பச்சாபாளையம், புதுப்பை, வள்ளியரச்சல், வீரசோழபுரம், வேலம்பாளையம், வேலப்பநாய்க்கன்வலசு ஆகிய 9 ஊராட்சிகளில் நேற்று கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டங்களில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், திட்ட அறிக்கை தயாரித்தல், குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், திட்ட பணி முன்னேற்றம் மற்றும் நிதி செலவினங்கள் குறித்தும் பல விவாதங்கள் நடைபெற்று தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள். பச்சாபாளையம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கி பேசியதாவது:-

கிராம சபையின் நோக்கம் ஊராட்சியின் வளர்ச்சிக்கு திட்டமிடுதல் குறித்து பொதுமக்களின் முன்னிலையில் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுதலே ஆகும். வீடு இல்லாதவர்களுக்கு பசுமை வீடு திட்டத்தில் வீடு கட்ட தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கழிப்பறை இல்லாத வீடுகளுக்கு அரசின் முழு மானியத்தில் கழிப்பறை கட்டும் பணி நடந்து வருகிறது. இதை கழிப்பறை இல்லாதவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக் பொருளுக்கு பதிலாக மாற்று பொருளை பயன்படுத்தி உடல் நலனையும் சுற்றுசூழலையும் பாதுகாக்க வேண்டும்.

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. வறுமையில் உள்ள மக்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான தொழில் பயிற்சி வழங்கி சுழல் நிதி கடன் வழங்கப்படுகிறது. திருமண உதவி திட்டம், மகப்பேறு நிதி உதவி திட்டம், பொது இ-சேவை மையம் மூலம் சான்று வழங்கும் திட்டம் செயல்படுத்தி வருகிறோம். பொதுமக்களின் அடிப்படை வசதிக்காக நடப்பாண்டில் நிதி ஒதுக்கபட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊராட்சிகளில் குடிநீர் பிரச்சினை ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதில் திட்ட இயக்குனர் ரமேஷ்குமார், வெள்ளகோவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் டெஸ்டன், ஜெயக்குமார், தாராபுரம் தாசில்தார் (பொது)தேவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com