

தேனி,
நாடு முழுவதும் குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தேனியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தேசிய கொடி ஏற்றினார்.
தொடர்ந்து கலெக்டர் பல்லவி பல்தேவ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் திறந்த ஜீப்பில் நின்றபடி போலீசார், தீயணைப்புத்துறையினர், ஊர்க்காவல் படையினர், நாட்டு நலப்பணித்திட்டம், சாரண, சாரணியர், என்.சி.சி. மாணவ, மாணவிகளின் அணிவகுப்பை பார்வையிட்டனர்.
பின்னர் போலீசார் உள்ளிட்டோரின் கம்பீர அணிவகுப்பு நடந்தது. அணிவகுப்பு மரியாதையை கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் ஏற்றுக் கொண்டனர். பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளை கலெக்டர் கவுரவித்தார்.
விழாவில் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் 150 பயனாளிகளுக்கு, ரூ.40 லட்சத்து 58 ஆயிரத்து 284 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அத்துடன், சிறப்பாக பணியாற்றிய 60 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கம், 15 போலீசாருக்கு சிறந்த போலீசாருக்கான சான்றிதழ்கள், அரசின் பிற துறைகளை சேர்ந்த 115 பேருக்கு பாராட்டு சான்றிதழ்கள் ஆகியவை வழங்கப்பட்டது. நலத்திட்டம், பதக்கம், சான்றிதழ்களை கலெக்டர் வழங்கி பாராட்டினார்.
மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் பள்ளி மாணவ, மாணவிகள், ஆதரவற்றோர் காப்பக குழந்தைகள் 640 பேர் பங்கேற்றனர். தேசப்பற்று, தமிழ் மொழியின் சிறப்பு, இயற்கை வளங்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு போன்றவற்றை மையப்படுத்தி கலை நிகழ்ச்சிகள் அமைந்து இருந்தன. கலை நிகழ்ச்சியில் மாணவர்கள் செய்த யோகாசனங்கள் பார்வையாளர்களை மெய் சிலிர்க்க வைத்தது.
இந்த விழாவில், உத்தமபாளையம் சப்-கலெக்டர் வைத்திநாதன், மாவட்ட வன அலுவலர் கவுதம், மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, உதவி கலெக்டர் (பயிற்சி) தினேஷ்குமார் மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.