

மாம்பழ சீசன்
அலங்காநல்லூர், பாலமேடு வடக்குப்பகுதியில் உள்ள மாணிக்கம்பட்டி, வெள்ளையம்பட்டி, ஆதனூர், சரந்தாங்கி, முடுவார்பட்டி, பாரைப்பட்டி, கோடங்கிப்பட்டி, சேந்தமங்கலம், வலையபட்டி, அய்யூர், மறவபட்டி, லக்கம்பட்டி, சாத்தியாறு அணை, கோம்பைக்காடு உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மாந்தோப்புகள் உள்ளன. ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் தொடங்கும் மாம்பழ சீசன் ஜூலை மாதம் வரை நீடிக்கும்.
பூத்துக் குலுங்குகிறது
இதையொட்டி விவசாயிகள் மாமரங்களுக்கு முன் கூட்டியே மருந்து தெளிப்பது, ஆழ்துளை கிணறு மூலம் நீர் பாய்ச்சுவது உள்ளிட்ட பல்வேறு விவசாய பணிகள் செய்துள்ளனர். மேலும் கடந்த மாதம் பெய்த புயல் மழை காரணமாகவும், சாத்தியாறு அணை உள்ளிட்ட பகுதிகளில் நீர் நிரம்பியதாலும் இப்பகுதியில் நீர் செழிப்பாகி மாமரங்களில் தற்போது பூ பூக்க தொடங்கியுள்ளது.
இது குறித்து கூட்டுறவு வங்கி தலைவர் சரந்தாங்கி முத்தையன், அய்யூர் ஊராட்சி தலைவர் அபூதாஹிர் ஆகியோர் கூறியதாவது:-
அவ்வப்போது பெய்த மழை காரணமாகவும், மழையின் பூமி ஈரத்தாலும் பெரும்பாலான பகுதிகளில் மாமரங்களில் அதிக அளவில் பூ பூத்துள்ளது. மாமரங்கள் காய் காய்த்து அறுவடையாக இன்னும் 3 மாதங்களே உள்ளன. மேலும் கல்லாமை, காசா, மல்கோவா, பாலாமணி, இமாம்பசந்த் உள்ளிட்ட பல்வேறு ரகமான மாங்காய்கள் இப்பகுதியில் விளைகின்றன.
இலவச மரக்கன்றுகள்
கடந்த சில வருடங்களாக ஏற்பட்ட வறட்சியின் காரணமாக பல இடங்களில் மாமரங்கள் பட்டு போய் உள்ளன. எனவே வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் ஆய்வு செய்து இலவசமாக அரசு மாமரக்கன்றுகள் வழங்க வேண்டும். மேலும் தற்போதைய சூழலில் கூலியாட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இவ்வளவு இடையூறுகளுக்கு பிறகும் விவசாயிகள் மாமரங்களை பராமரித்து வருகின்றனர். கடந்த வருடத்தை விட இந்த வருடம் தேவையான பருவமழை பெய்துள்ளதால் ஒரு சில பகுதிகளில் மட்டும் விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் இந்த வட்டாரத்தில் அதிகமாக மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே இந்தப் பகுதியில் மாம்பழச்சாறு பதப்படுத்தும் தொழிற்சாலையை அமைக்க அரசு முன்வர வேண்டும். இந்த கோரிக்கை பல வருடங்களாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. எனவே இதனை அரசு நிறைவேற்றித்தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.