மகனை தாய் அடித்துக்கொன்ற வழக்கு: பிரேத பரிசோதனை செய்த டாக்டர் நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு

மகனை தாய் அடித்து கொலை செய்த வழக்கில், சிறுவனின் உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மகனை தாய் அடித்துக்கொன்ற வழக்கு: பிரேத பரிசோதனை செய்த டாக்டர் நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

சென்னை அம்பத்தூரில் வசித்தவர்கள் கார்த்திகேயன், புவனேஸ்வரி. புவனேஸ்வரிக்கு ஏற்கனவே திருமணமாகி கிஷோர் (வயது 4) என்ற மகன் இருந்தான். கார்த்திகேயனுடன், கள்ளத்தொடர்பு ஏற்பட்டதால் கணவரை விட்டு பிரிந்து புவனேஸ்வரி சென்னை வந்து விட்டார்.

இந்தநிலையில், தங்களுக்கு இடையூறாக மகன் இருப்பதாக கருதி, அவனை புவனேஸ்வரி அடித்துக் கொலை செய்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரை புவனேஸ்வரியின் தாயாரே கொடுத்திருந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அம்பத்தூர் போலீசார், சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கார்த்திகேயன், புவனேஸ்வரியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில், இருவரும் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் விசாரித்தார்.

அப்போது நீதிபதி, பெற்ற மகனை தாய் கொலை செய்வாரா? என்று கேள்வி எழுப்பினார். பின்னர் பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இந்தநிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் வக்கீல் பிரபாவதி ஆஜராகி, இந்த வழக்கில் புவனேஸ்வரிக்கு எதிராக அவரை பெற்ற தாய் தான் புகார் செய்துள்ளார்.

சிறுவனை புவனேஸ்வரி அடித்தபோது நேரில் பார்த்த சாட்சிகளும் உள்ளனர் என்று கூறி பிரேதபரிசோதனை அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்தார். அதை படித்து பார்த்த நீதிபதி, வலது தொடையில் ஏற்பட்ட ரத்தக்கட்டினால் உயிர் போனதாக டாக்டர் கூறியுள்ளாரே? ரத்தக்கட்டினால் உயிர்போகுமா? என்று கேள்வி எழுப்பினார்.

பின்னர், சிறுவனின் உடலை பிரேத பரிசோதனை செய்த கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் சந்திரசேகர் இன்று (வெள்ளிக்கிழமை) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com