ஒரு டன் திராட்சைகளால் உருவான யானைகள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது

குன்னூரில் 60-வது பழக்கண்காட்சி நேற்று தொடங்கியது. இதில் ஒரு டன் திராட்சையால் அமைக்கப்பட்டு உள்ள யானைகளின் உருவம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.
ஒரு டன் திராட்சைகளால் உருவான யானைகள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது
Published on

குன்னூர்,

நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நிலவுகிறது. இந்த சீசன் காலத்தில் வெளி மாவட்ட, வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு அதிகளவில் வருவார்கள். இதையொட்டி சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க மே மாதம் முதல் வாரத்தில் கோடை விழா நடத்தப்படுகிறது.

கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி, கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி, ஊட்டியில் மலர் கண்காட்சி போன்றவை நடத்தப்படும். கோடை விழாவின் இறுதி நிகழ்ச்சியாக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு 60-வது பழக்கண்காட்சி நீலகிரி மாவட்ட தோட்டக்கலை துறை சார்பில் நடத்தப்பட்டது. இதையொட்டி நேற்று காலை 10.30 மணிக்கு பழக்கண்காட்சி தொடங்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் ரிப்பன் வெட்டி பழக்கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அர்ஜூனன் எம்.பி., சாந்திராமு எம்.எல்.ஏ., தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சிவசுப்ரமணியம் சாம்ராஜ், குன்னூர் ஆர்.டி.ஓ. பத்ரிநாத், தோட்டக்கலை துறை துணை இயக்குனர் உமாராணி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் இணைய தலைவர் மில்லர், குன்னூர் நகர்மன்ற முன்னாள் தலைவர் சரவணக்குமார், அண்ணா தோட்ட தொழிலாளர் சங்க மாநில செயலாளர் ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பூங்கா நுழைவு வாயிலில் 12 அடி உயரத்தில் பலாப்பழம், பம்பளிமாஸ், வாழை, எலுமிச்சை, அன்னாசி, சாத்துக்குடி, ஆரஞ்சு, மாம்பழம் ஆகிய பழங்களை கொண்டு அலங்கார வளைவு அமைக்கப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்ட தோட்டக்கலை துறையினர் சார்பில் பழக்கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் திராட்சை பழங்களை கொண்டு யானை மற்றும் குட்டி யானை உருவாக்கப்பட்டு உள்ளது.

அதாவது ஒரு டன் பச்சை மற்றும் கருப்பு திராட்சை பழங்களால் 12 அடி நீளம், 4 அடி அகலம், 9 அடி உயரம் கொண்ட யானை மற்றும் 3 அடி நீளம், 1 அடி அகலம், 3 அடி உயரத்தில் குட்டி யானையின் உருவம் அமைக்கப்பட்டு உள்ளது. தாய் யானை, குட்டியானைக்கு துதிக்கை மூலம் வாழைப்பழம் கொடுப்பது போன்று காட்சி படுத்தப்பட்டு உள்ளது. இந்த யானைகளின் உருவங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. அந்த யானைகள் முன்பு நின்று சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

மேலும், மொத்தம் 500 கிலோ எடையில் பல்வேறு வகை பழங்களை கொண்டு கோலங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. தோட்டக்கலை துறை சார்பில் தமிழ்நாட்டில் விளையும் பல்வேறு பழங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன. கன்னியாகுமாரி மாவட்ட தோட்டக்கலை துறையினர் சார்பில் 10 கிலோ ஆரஞ்சு, ஸ்டாபெர்ரி, செர்ரி பழங்களை கொண்டு தங்க மீன் உருவாக்கப்பட்டு உள்ளது.

திருச்சி தோட்டக்கலை துறை சார்பில் முலாம் பழம் மற்றும் தர்பூசணி பழங்களால் மயில், கடலூர் தோட்டக்கலை துறையினர் சார்பில் 105 கிலோ அன்னாசி மற்றும் ஸ்டாபெர்ரி பழங்களிலான இரட்டை மீன் உருவங்கள், வேலூர் தோட்டக்கலை துறை சார்பில் ஆயிரம் வாழைப்பழங்களை கொண்டு பாண்டா கரடி உருவங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. திருப்பூர் தோட்டக்கலை துறை சார்பில் அந்த மாவட்டத்தின் பல்வேறு வகையான பழங்கள் காட்சி படுத்தப்பட்டு இருந்தது.

பழக்கண்காட்சியில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனங்களில் விளையும் மருத்துவ குணம் வாய்ந்த அத்திப்பழம், குரங்குப்பழம், பன்னீர் கொய்யா, ஊசி கிளா பழம் போன்றவை வைக்கப்பட்டு இருந்தன. விவசாயிகள் மற்றும் பொதுமக்களை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு பழங்களை கொண்டு காட்சிப்படுத்தும் போட்டியாளர்கள் அரங்கு அமைக்கப்பட்டு இருந்தது. இதில் 43 பேர் போட்டியில் பங்கு பெற்று உள்ளனர். பழக்கண்காட்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிறைவு பெறுகிறது. விழாவில் சிறந்த அரங்குகள் அமைத்து இருந்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப் படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com