கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற இளம்பெண் தவறி விழுந்து சாவு

திசையன்விளை அருகே கணவருடன் மோட்டார்சைக்கிளில் சென்ற இளம்பெண் தவறி விழுந்து இறந்தார். அந்த பெண்ணின் துப்பட்டா, மோட்டார்சைக்கிள் சக்கரத்தில் சிக்கியதால் இந்த விபத்து நேர்ந்தது.
கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற இளம்பெண் தவறி விழுந்து சாவு
Published on

திசையன்விளை

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள புதுக்குடியை சேர்ந்தவர் முத்துக்குமார். இவருடைய மனைவி முத்துரேவதி (வயது 23). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. தற்போது இவர்கள் பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் வசித்து வந்தனர்.

முத்து ரேவதியின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள பெட்டைகுளம் எனும் கிராமம் ஆகும். அங்கு நேற்று முன்தினம் இரவில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக முத்துக்குமாரும், முத்துரேவதியும் மோட்டார்சைக்கிளில் பெட்டைகுளத்துக்கு சென்று கொண்டிருந்தனர்.

பெட்டைகுளம் அருகே உள்ள நந்தன்குளம் பக்கத்தில் வந்தபோது முத்துரேவதி அணிந்திருந்த சுடிதார் துப்பட்டா, மோட்டார்சைக்கிளின் பின்சக்கரத்தில் சிக்கியதாக தெரிகிறது. இதனால் மோட்டார்சைக்கிள் நிலைதடுமாறியதில் முத்துரேவதி தவறி ரோட்டில் விழுந்தார். இதில் முத்துரேவதிக்கு முகத்தில் படுகாயம் ஏற்பட்டது.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திசையன்விளை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது, முத்துரேவதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி வழக்குப்பதிவு செய்தார். முத்துரேவதிக்கு திருமணம் முடிந்து 2 ஆண்டுகளே ஆவதால், சேரன்மாதேவி உதவி கலெக்டர் மேல் விசாரணை நடத்த உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com