

பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா ஆர்.கே.பேட்டை பகுதியில் மணல் கடத்தப்படுவதாக ஆர்.கே.பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து ஆர்.கே.பேட்டை பஜாரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திரமாநிலத்தில் இருந்து சிலிகான் மணல் ஏற்றி வந்த 3 லாரிகளை போலீசார் தடுத்து நிறுத்தி லாரிகளை பறிமுதல் செய்தனர்.
லாரிகளில் மணல் கடத்தி வந்த பள்ளிப்பட்டு தாலுகா கோபாலபுரம் என்கிற மூங்கிலேரி கிராமத்தை சேர்ந்த சைதுல்லா( வயது 31), வேலூர் மாவட்டம் தும்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பழனி (25), பெரியவண்ணான்குப்பம் கிராமத்தை சேர்ந்த பாக்யராஜ் (30) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
பொதட்டூர்பேட்டை
அதே போல் பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டை பகுதியில் சிலர் இருசக்கர வாகனங்களில் மணல் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து போலீசார் கீளப்பூடி தேவாலயம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இரு சக்கர வாகனங்களில் கொசஸ்தலை ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்த கீளப்பூடி காலனியை சேர்ந்த அருள் (32), சவுட்டூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (27) ஆகியோரை போலீசார் கைது செய்து 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
புல்லரம்பாக்கம்
திருவள்ளூரை அடுத்த புல்லரம்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் புல்லரம்பாக்கம் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த ஒரு மாட்டு வண்டியை பறிமுதல் செய்த போலீசார் அதை ஓட்டி வந்த புன்னப்பாக்கத்தை சேர்ந்த நடேசன் (வயது 42) என்பவரை கைது செய்தனர். அதே போல திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு போலீசார் நேற்று முன்தினம் வெள்ளவேடு பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த ஒரு லாரியை பறிமுதல் செய்த போலீசார் அதை ஓட்டி வந்த வெள்ளவேடு காலனியை சேர்ந்த தியாகு (35), உடன் வந்த திருமழிசையை சேர்ந்த லோகநாதன் (55), பூங்கோவன் (46) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.