தற்காலிக ஆசிரியர் பணியிடத்துக்கு குவியும் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்வதில் சிக்கல்

மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் தற்காலிக ஆசிரியர் பணியிடத்திற்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.
தற்காலிக ஆசிரியர் பணியிடத்துக்கு குவியும் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்வதில் சிக்கல்
Published on

மதுரை,

மதுரை மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு குழுவான ஜாக்டோ-ஜியோ சார்பில் தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் அரசு நிர்வாகம் முற்றிலும் முடங்கியுள்ளது. குறிப்பாக ஆசிரியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் பொதுத்தேர்வை எதிர்கொண்டுள்ள மாணவ-மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் 6 ஆயிரத்து 145 அரசுப்பள்ளி ஆசிரியர்களும், 176 அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களும் பணிக்கு வராமல் வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டுள்ளனர். அரசு எச்சரிக்கை விடுத்தும் அவர்கள் பணிக்கு திரும்பாததால் தற்காலிக ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்கள் மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் குவிந்தவண்ணம் உள்ளன.

நேற்று முன்தினம் தற்காலிக ஆசிரியர் பணிக்காக 3 ஆயிரம் விண்ணப்பங்களும், நேற்று 2 ஆயிரத்து 500 விண்ணப்பங்களும் வந்துள்ளன. ஆனால், அரசு அறிவிப்பின்படி தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஓய்வுபெற்ற ஆசிரியர்களாக இருக்க வேண்டும். பட்டதாரி ஆசிரியர்களை பொறுத்தமட்டில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுநிலை ஆசிரியர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் முதுநிலை பட்டப்படிப்புடன் பி.எட். தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆனால், அனைத்து பணியிடங்களுக்கும் மாதம் ரூ.10 ஆயிரம் மட்டும் சம்பளமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அரசின் அறிவிப்பை சரிவர கவனத்தில் கொள்ளாமல் பட்டப்படிப்பு படித்த அனைவரும் தற்காலிக ஆசிரியர் பணியிடத்துக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.

இதனால், ஆயிரக்கணக்கில் குவிந்துள்ள விண்ணப்பங்களை பரிசீலனை செய்வதில் முதன்மைக்கல்வி அலுவலக பணியாளர்கள் திண்டாடி வருகின்றனர். இதற்கிடையே, மதுரையின் புறநகர் பகுதியைச்சேர்ந்த பட்டதாரி பெண் ஒருவர் தனது, விண்ணப்பத்துடன் அசல் கல்விச்சான்றிதழ்களை இணைத்துள்ளதாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த முதன்மைக்கல்வி அலுவலக பணியாளர்கள், அந்த பெண்ணை விண்ணப்பங்களில் இருந்து தேடி எடுத்துக்கொள்ளும்படி தெரிவித்தனர். பின்னர் பல மணி நேர போராட்டத்துக்கு பின்னர் அந்த பெண் தனது அசல் சான்றிதழ்களை எடுத்துச்சென்றார். இந்த சம்பவம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com