மாவட்டம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை திரளான முஸ்லிம்கள் பங்கேற்பு

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
மாவட்டம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை திரளான முஸ்லிம்கள் பங்கேற்பு
Published on

நாமக்கல்,

ரம்ஜான் பண்டிகையை நேற்று முஸ்லிம்கள் சிறப்பாக கொண்டாடினர். இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து மசூதிகள் மற்றும் பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. இதில் திரளான முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர்.

தொழுகை முடிந்தபின்பு ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். பின்னர் ஏழைகளுக்கு பல்வேறு உதவிகளை வழங்கினர். உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பிரியாணி வழங்கியும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் - சேலம் ரோடு ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடந்தது. இந்த தொழுகையை இமாம் சாதிக் நடத்தினார். இந்த சிறப்பு தொழுகையின் போது இந்த கல்வி ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முஸ்லிம் மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இதில் முத்தவல்லி ஷேக்நவீத் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் உள்பட ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக அவர்கள் நாமக்கல் - சேந்தமங்கலம் ரோடு பேட்டை அஞ்சுமனே இஸ்லாமியா பள்ளிவாசலில் இருந்து ஊர்வலமாக தொழுகை நடந்த இடத்திற்கு வந்தனர். தொழுகையில் ஈடுபட்ட முஸ்லிம்களுக்கு இந்து பிரமுகர் ஒருவர் உள்பட சிலர் பாதாம்பால் வழங்கினர்.

இதேபோல் நேற்று நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் திடல் மற்றும் நாமக்கல் கோட்டை பள்ளிவாசல், மாருதிநகர் பள்ளிவாசல் என அனைத்து பள்ளிவாசல்களிலும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடந்தது. மேலும் ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்தி என மாவட்டம் முழுவதும் நேற்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com