

விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல், ஏற்கனவே நடைபெற்ற குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தருதல் குறித்து போலீசாருக்கான ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
விழுப்புரம் மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது குறைந்து இருக்கிறது. மேலும் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் திருட்டு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அதிகளவில் நிலுவையில் உள்ளது. இதில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்து, வழக்குகளை முடிக்க வேண்டும்.
விழுப்புரம் மாவட்டத்தில் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகள் மீது பாலியல் ரீதியான குற்றங்கள் நடைபெற்றால் உடனடியாக போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். மது கடத்தலை முற்றிலும் தடுத்து நிறுத்திட வேண்டும். சாராயம் விற்பனை செய்தால் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். சாராயம் விற்பனையை தடுக்காத போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் பேசினார்.
கூட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராமநாதன், மகேஷ், நீதிராஜன், இளங்கோவன், சங்கர், திருமால், ராஜேந்திரன் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களில் உள்ள இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் கலந்துகொண்டனர்.