போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை - பெண் புகார்

போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்வு நாள் கூட்டத்தில் கலெக்டரிடம், பெண் புகார் மனு அளித்தார்.
போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை - பெண் புகார்
Published on

வேலூர்

போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்வு நாள் கூட்டத்தில் கலெக்டரிடம், பெண் புகார் மனு அளித்தார்.

குறைதீர்வு கூட்டம்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மற்றும் புகார்களை மனுவாக கலெக்டரிடம் வழங்கினர்.

கூட்டத்தில், வீட்டுமனை பட்டா, புதிய ரேஷன்கார்டு, வேலைவாய்ப்பு, கடனுதவி, முதியோர் உதவித்தொகை என்று 263 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை

கூட்டத்தில், இறையன்காடு காட்டுக்கொல்லை கிராமத்தை சேர்ந்த சாந்தி என்பவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எனது தந்தை கே.வி.குப்பம் தாலுகா லத்தேரி கிராமத்தை சேர்ந்த தேவராஜ். தாயார் ஆண்டாள். இருவரும் இறந்து விட்டனர். அவர்களுக்கு இறப்புக்கு பின்னர் வாரிசு அடிப்படையில் எனக்கு கிடைத்த பூர்வீக சொத்தை எனது மகளுக்கு செட்டில்மெண்ட் செய்து கொடுத்தேன்.

இந்த நிலையில் எனது அண்ணன் ஆனந்தனின் மகன் அனீஷ்குமார் வி.கே.புரத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். அவர், பூர்வீக சொத்தை உங்களுக்கு தரமுடியாது என்று மிரட்டி வருகிறார். எங்கள் குடும்ப சொத்து பத்திரங்கள், வாரிசு சான்றிதழ் என்னிடம்தான் உள்ளன.

நாங்கள் பொதுப்பிரிவு வகுப்பை சேர்ந்தவர்கள். ஆனால் அனீஷ்குமார் தன்னை பிற்படுத்தப்பட்டோர் என்றுகூறி போலி சான்றிதழை பொய்யாக தயாரித்து பணியில் சேர்ந்துள்ளார். போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

மோசடியாக புகார் பதிவு

அணைக்கட்டு அருகே உள்ள கெங்கநல்லூர் கிராமத்தை சேர்ந்த வேலு மகன் சக்தி காலில் ஏற்பட்டுள்ள காயத்துக்கு கட்டு போட்டப்படி கலெக்டரிடம் அளித்த மனுவில், நான் அணைக்கட்டில் உள்ள தனியார் கேட்டரிங் கல்லூரியில் படித்து வருகிறேன்.

திருவண்ணாமலையில் வருகிற மார்ச் மாதம் நடைபெறும் ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்று, உடற்தகுதி பெறுவதற்காக தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் பயிற்சி செய்து வந்தேன்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அணைக்கட்டு சாலை பகுதியில் ஓட்ட பயிற்சியில் ஈடுபட்டிருந்தேன். அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதி கால்முறிவு ஏற்பட்டது. இது குறித்து அணைக்கட்டு போலீசில் புகார் அளித்தேன். ஆனால் போலீசார் என் மீது மோதிய மோட்டார் சைக்கிளுக்கு பதிலாக மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோசடியாக புகார் பதிவு செய்துள்ளனர். என் மீது மோதிய வாகனம் மற்றும் அதன் உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், சமூக பாதுகாப்பு திட்ட துணைகலெக்டர் காமராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நலஅலுவலர் வேணுசேகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் பானு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com