ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வளாகத்தில் 55 கடைகளை அகற்ற நடவடிக்கை

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வளாகத்தில் உள்ள 55 கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடைகளை உடனடியாக காலி செய்யும்படி இணை ஆணையர் நோட்டீசு அனுப்பி உள்ளார்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வளாகத்தில் 55 கடைகளை அகற்ற நடவடிக்கை
Published on

திருச்சி,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன் தீ விபத்து ஏற்பட்டு ஒரு மண்டபம் இடிந்து விழுந்தது. இந்த தீவிபத்துக்கு கோவில் வளாகத்தில் உள்ள ஒரு கடையில் முதலில் தீ பிடித்ததே காரணம் என தெரியவந்தது.

இதனால் தமிழகம் முழுவதும் உள்ள முக்கியமான கோவில்களில் உள்ள எல்லா கடைகளையும் அப்புறப்படுத்த வேண்டும், எதிர்காலத்தில் இதுபோன்ற தீ விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என பல்வேறு அமைப்புகள் சார்பிலும் கோரிக்கைகள் விடப்பட்டன.

திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில் வளாகங்களில் ஏராளமான கடைகள் உள்ளன.

இந்த கடைகளினால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்தது போல் தீ விபத்து மற்றும் அசம்பாவித சம்பவங்கள் நடந்து விடாமல் இருக்க அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கைகளின் அடிப்படையில் இந்து சமய அறநிலைய துறை தற்போது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வளாகத்தில் ஏராளமான கடைகள் உள்ளன. இந்த கடைகளை உடனடியாக காலி செய்து கொடுக்கும்படி கோவில் நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக கோவில் இணை ஆணையர் ஜெயராமன் கூறியதாவது:-

கோவில் வளாகம் மற்றும் கோபுர பகுதிகளில் வைக்கப்பட்டு உள்ள 55 கடைகளை உடனடியாக காலி செய்து கொடுக்கும்படி நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது. இவற்றில் சில கடைகள் தொடர்பாக அறநிலைய துறை இணை ஆணையர் கோர்ட்டில் வழக்குகளும் உள்ளன. இந்த வழக்குகளில் இன்னும் ஒரு வாரத்திற்குள் தீர்ப்பு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுவதால் அதன் பின்னர் துரித நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com