குறைந்த அளவு வாக்காளர்கள் இருக்கும் இடங்களில் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்க நடவடிக்கை

குறைந்த அளவு வாக்காளர்கள் இருக்கும் இடங்களில் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பார்வையாளர் ஆனந்ராவ் விஷ்ணுபட்டீல் கூறினார்.
குறைந்த அளவு வாக்காளர்கள் இருக்கும் இடங்களில் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்க நடவடிக்கை
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத்திருத்தம் தொடர்பான பணிகளை கண்காணிக்க தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆனந்ராவ் விஷ்ணுபட்டீல் நேற்று கிருஷ்ணகிரி வந்தார். அவரது தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு சிறப்பு சுருக்க முறைத்திருத்தம் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. இதற்கு கலெக்டர் பிரபாகர் முன்னிலை வகித்தார்.

இந்த கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆனந்ராவ் விஷ்ணுபட்டீல் பேசியதாவது:-

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வாக்குச்சாவடி நிலைய முகவர்களின் பட்டியலை வழங்க வேண்டும். இன்று (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் வருகிற 14-ந் தேதி நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்களில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்த மனுக்களை அளிக்க வேண்டும். வாக்காளர் பதிவு அலுவலர்கள் தங்கள் கோட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் எந்தவித புகார்களுக்கும் இடமளிக்காமல் சிறப்பு சுருக்க முறைத்திருத்த பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

வாக்காளர் பட்டியலில் ஏதாவது ஆட்சேபனை இருந்தால் அரசியல் கட்சி பிரமுகர்கள் தேர்தல் வருவதற்கு முன்பே வாக்குச்சாவடி மாற்றம், மற்றும் வாக்காளர் சேர்த்தல், நீக்கல் குறித்து தேர்தல் அலுவலர்களிடம் தெரிவிக்க வேண்டும். இறந்தவர்களுடைய இறப்பு சான்றிதழ் அடிப்படையில் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு அவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். 18 வயது நிரம்பியவர்களை விடுபடாமல் சேர்க்க வேண்டும்.

இந்த பணிகளுக்கு அரசியல் கட்சிகளின் முகவர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு தொலை தூரம் சென்று வாக்களிக்க சிரமம் இல்லாத வகையில் குறைந்த அளவு வாக்காளர்கள் இருக்கும் இடங்களில் அரசியல் கட்சிகள், வாக்காளர்கள் கோரிக்கை வைக்கும் பட்சத்தில் வாக்குப்பதிவு மையங்கள் அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட கிருஷ்ணர் கோவில் தெரு, மாடத்தெரு, பகுதிகளில் வீடு, வீடாக சென்று வாக்காளர் பட்டியலில் வாக்காளர் பெயர் சேர்த்தல் மற்றும் இறந்த வாக்காளர் பெயர் நீக்கல் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமமூர்த்தி, உதவி கலெக்டர்கள் சரவணன், சந்தியா, தேர்தல் பிரிவு தாசில்தார் தணிகாசலம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com