கர்நாடகத்தில் நடிகர் ரஜினிகாந்தின் ‘காலா’ படம் திரையிடப்படாது: கன்னட திரைப்பட வர்த்தக சபை கூட்டத்தில் தீர்மானம்

கர்நாடகத்தில் நடிகர் ரஜினிகாந்தின் ‘காலா‘ படம் திரையிடப்படாது என்று கன்னட திரைப்பட வர்த்தக சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கர்நாடகத்தில் நடிகர் ரஜினிகாந்தின் ‘காலா’ படம் திரையிடப்படாது: கன்னட திரைப்பட வர்த்தக சபை கூட்டத்தில் தீர்மானம்
Published on

பெங்களூரு,

காவிரி பிரச்சினையில் நடிகர் ரஜினிகாந்த் தமிழ்நாட்டிற்கு ஆதரவாக பேசினார். இதற்கு கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ரஜினி கதாநாயகனாக நடித்துள்ள காலா படம் வருகிற 7-ந் தேதி வெளியாகவுள்ளது. இந்த காலா படத்தை கர்நாடகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று வாட்டாள் நாகராஜ் உள்பட பல்வேறு கன்னட அமைப்பினர் ஏற்கனவே அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கன்னட திரைப்பட வர்த்தக சபை தலைவர் சா.ரா.கோவிந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் அந்த சபையின் நிர்வாகிகள், தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர். இதில், நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம் கர்நாடகத்தில் திரையிடப்படாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்திற்கு பிறகு சா.ரா.கோவிந்த் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இது மொழி பிரச்சினை. அதிலும் மிகவும் உன்னிப்பான உணர்வுப்பூர்வமான விவகாரம். கர்நாடகத்தில் காலா படத்திற்கு அதிகளவில் எதிர்ப்பு எழுந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் காவிரி பிரச்சினையில் கர்நாடகத்திற்கு எதிராக பேசியது மட்டுமின்றி, கன்னடர்களை கிளறிவிட்டுள்ளார். அதன் காரணமாக அவர் நடித்துள்ள காலா படத்தை கர்நாடகத்தில் திரையிடுவது இல்லை என்று முடிவு எடுத்துள்ளோம். இவ்வாறு சா.ரா.கோவிந்த் கூறினார்.

இதுபற்றி வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் நரசிம்மலு கூறுகையில், கர்நாடகத்தின் நிலம், நீர், மொழியை காப்பாற்றுவதில் நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம். காவிரி பிரச்சினையில் கர்நாடகத்திற்கு எதிராக பேசியதால் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தை நாங்கள் திரையிடுவது இல்லை என்று முடிவு எடுத்துள்ளோம். கமல்ஹாசன் படங்களும் திரையிடமாட்டோம் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com