நடிகை பானுப்பிரியா வீட்டில் திருடியதாக சிறுமி மீது 12 நாட்களுக்கு பிறகு வழக்குப்பதிவு தாயாரிடம் போலீசார் விசாரணை

நடிகை பானுப்பிரியா வீட்டில் திருடியதாக சிறுமி மீது 12 நாட்களுக்கு பிறகு வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், சிறுமியின் தாயாரிடம் போலீசார் நேற்று விசாரணை மேற்கொண்டனர்.
நடிகை பானுப்பிரியா வீட்டில் திருடியதாக சிறுமி மீது 12 நாட்களுக்கு பிறகு வழக்குப்பதிவு தாயாரிடம் போலீசார் விசாரணை
Published on

சென்னை,

பிரபல தமிழ் நடிகை பானுப்பிரியா சென்னை தியாகராயநகர் விஜயநகர சாலையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். கடந்த மாதம் (ஜனவரி) 19-ந் தேதி பானுப்பிரியாவும், அவரது சகோதரர் கோபாலகிருஷ்ணனும் பாண்டிபஜார் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அந்த புகார் மனுவில், கடந்த ஆண்டு (2018) பிப்ரவரி மாதம் ஆந்திராவை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை தெரிந்தவர்கள் உதவியுடன் எங்கள் வீட்டில் வேலைக்கு சேர்த்தோம். பணிக்கு சேர்ந்த 2 மாதங்களில் அவரது தாயார் பிரபாவதி (வயது 35) மகளை பார்க்க எங்கள் வீட்டிற்கு வந்து சென்றார். அவர் வந்து சென்ற பிறகு எங்கள் வீட்டில் இருந்த 15 பவுன் நகை, ரூ.1 லட்சம் , ஒரு ஐபேடு, ஒரு கேமரா, 2 விலை உயர்ந்த கைக்கெடிகாரங்கள் உள்ளிட்டவை காணவில்லை. மீண்டும் மகளை பார்க்க பிரபாவதி வந்தபோது, அவரிடம் இதுகுறித்து கேட்டோம். அதற்கு அவர் தனது மகள் தான் நகை மற்றும் பணத்தை எடுத்து தன்னிடம் கொடுத்ததாக தெரிவித்தார். அந்த நகைகள் ஆந்திராவில் இருப்பதாகவும், அவற்றை திருப்பி கொடுத்துவிட்டு தனது மகளை அழைத்து செல்வதாகவும் கூறிவிட்டு சென்றார். ஆனால், அதன் பிறகு பிரபாவதி வரவே இல்லை. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது நகை - பணத்தை மீட்டுத் தரவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இதற்கிடையே பானுப்பிரியா தனது மகளை அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாக பிரபாவதி ஆந்திர போலீசில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து ஆந்திர போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன், சென்னை வந்து சிறுமியை மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

ஆனால், பானுப்பிரியா அளித்த புகார் மனு அடிப்படையில் பாண்டிபஜார் போலீசார் வழக்கு எதுவும் பதியாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில், 12 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் இரவு திடீரென வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிறுமி மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று காலை சிறுமியின் தாயார் பிரபாவதியிடம் தியாகராயநகர் துணை போலீஸ் கமிஷனர் அசோக்குமார் விசாரணை நடத்தினார். சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக இந்த விசாரணை தொடர்ந்தது. காப்பகத்தில் இருக்கும் சிறுமியிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். 2 பேரிடம் விசாரணை நடத்தி முடித்த பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக போலீசார் முடிவு செய்ய இருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com