ஆடி அமாவாசையையொட்டி திருவையாறில் மூதாதையர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு

ஆடி அமாவாசையையொட்டி திருவையாறில் மூதாதையர்களுக்கு பொதுமக்கள் திதி கொடுத்தனர். காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அதில் புனித நீராடினர்.
ஆடி அமாவாசையையொட்டி திருவையாறில் மூதாதையர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு
Published on

திருவையாறு,

ஆடி மாதத்தில் வரும் அமாவாசை, புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மற்றும் தை மாதத்தில் வரும் அமாவாசை ஆகிய 3 அமாவாசைகளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். ஆடி அமாவாசை அன்று மூதாதையர்கள் பூமிக்கு வருவதாக ஐதிகம். இந்த சமயத்தில் அவர்களை வரவேற்று திதி, நீர்க்கடன் செய்ய வேண்டும். இதனால் அவர்களது ஆசி கிடைத்து குடும்பம் முன்னேறும். நாம் செய்த பாவங்கள் நீங்கும். அதன்படி ஆடி அமாவாசையன்று நீர்நிலைகள் அருகே அமர்ந்து வேதமந்திரங்கள் சொல்லி திதி கொடுப்பது, மூதாதையர்கள் நினைவாக பிண்டம் செய்து உணவாக படைப்பது என்று செய்து வருகின்றனர். இந்த சடங்குகள் திருவையாறு, வேதாரண்யம், பூம்புகார் ஆகிய இடங்களில் மிகவும் சிறப்பாக நடைபெறும்.

ஆடி அமாவாசையையொட்டி நேற்று காலை முதலே தங்களது மூதாதையர்களுக்கு திதி கொடுக்க தஞ்சை மாவட்டம் திருவையாறில் உள்ள புஷ்ய மண்டபத்தில் திரளான பொதுமக்கள் வர தொடங்கினர். காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் திருவையாறு பேரூராட்சி சார்பில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டிருந்தது. அதில் பொதுமக்கள் புனித நீராடி மூதாதையர்களுக்கு திதி கொடுத்தனர். இதற்காக 50-க்கும் மேற்பட்ட புரோகிதர்கள் படித்துறைக்கு வந்திருந்தனர். இதனால் புஷ்ய மண்டபத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை அங்கு வந்து பார்வையிட்டார்.

ஆடி அமாவாசையையொட்டி ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகியுடன் காவிரி புஷ்ய மண்டபத்தில் தீர்த்தவாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக கோவிலில் இருந்து பஞ்சமூர்த்திகள் காவிரி ஆற்றுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டனர். அங்கு ஆற்றில் அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான பாதுகாப்பு பணியில் திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு அன்பழகன் தலைமையில் போலீசார் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com